இந்தியாவில் புதிதாக பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா.. எந்தளவு ஆபத்து?

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்கும் நிலையில், புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிர தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்குகிறது. மேலும், உயிரிழப்புகளும் 2000 கடந்துள்ளது.

கொரோனா பரவலுக்கு மக்களிடம் உள்ள அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் வைரஸ் பரவல் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ்

இந்த புதிய மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் நாட்டின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், இந்த வகை வைரஸ் வேகமாகப் பரவுகிறது. இதனால் குறைந்த காலத்தில் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, இதற்கு ஏற்ற வகையில் தடுப்பூசிகளிலும் தேவையான மாற்றதித் செய்து வருகிறோம். இது குறித்துக் கூடுதல் புரிதலைப் பெற மரபணு மாற்றத்தை வரிசைப்படுத்தி, கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

ஏன் இத்தனை வகைகள்

பொதுவாகவே ஒரு வைரஸ் பரவும்போது தன்னை தானே மாற்றிக்கொள்ளும். அதிகமாகப் பரவுகிறது என்றால் பல முறை அது தன்னை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. இரட்டை மரபணு மாறிய வைரசில் இருந்து இந்த புதிய மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தற்போது மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி போன்ற மாநிலங்களில் கண்டறியப்படுகிறது.

புதுவகை என்றால் என்ன

இரட்டை மரபணு மாறிய வைரஸ் என்பது இரண்டு வகையான மரபணு மாற்றத்தை ஒரே வைரஸ் கொண்டிருப்பதாகவும். மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் என்றால் மூன்று வகையான மரபணு மாற்றத்தை ஒரே வைரஸ் கொண்டிருப்பது. கொரோனா வைரசை அதிகளவில் மரபணு மாற்றத்திற்கு ஏற்ப வரிசைப் படுத்தினால் மட்டுமே கூடுதல் தகவலைத் தெரிந்துகொள்ள முடியும். இருப்பினும், இந்தியாவில் 1% குறைவாகவே மரபணு ரீதியாக வரிசைப்படுத்தப்படுகிறது.

வேகமாகப் பரவுகிறதா?

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இதுபோன்ற புதிய வகை கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த புதிய வகை எவ்வளவு தூரம் வேகமாகப் பரவுகிறது என்பது குறித்தும் இது எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளக் கூடுதல் ஆய்வுகள் தேவை.

இரட்டை மரபணு மாறிய வைரஸ் வேகமாகவும் குழந்தைகள் மத்தியிலும் பரவுவது உறுதியாகியுள்ளது. இப்போதைய சூழ்நிலையில் மும்முறை மரபணு மாறிய வைரஸ் என்பதைக் கவலையளிக்கும் ஒரு விஷயம் என்றே ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here