அடாது செய்யும் விடாத கொரோனா

மாணவர்கள்   நிலையென்ன?

கல்வித் துறைகளில் கோவிட்-19 தொற்று அதிவேகமாகப் பரவி வருவது பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் ஒட்டுமொத்தமாக அனைத்து பள்ளிகளையும் மூடுவது அதற்குத் தீர்வாகாது என்றும் பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பள்ளிகள் மட்டுமே மூடப்பட வேண்டும். மற்ற பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட வேண்டும். நேர்முக கற்றல், கற்பித்தலில் இடையூறு கூடாது. பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர் தங்களின் மனவோட்டங்களை முன்வைத்திருக்கின்றனர்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு முக்கியம்தான். ஆனால், அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவது என்பது இறுதி நடவடிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் ஒரே நேரத்தில் எல்லா மாணவர்களையும் வரவழைப்பதற்குப் பதிலாக மாணவர் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் சுழற்சி முறையில் பாட நேர அட்டவணையைப் பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டு அமல்படுத்தலாம். இதனால் மாணவர் இடையிலான தூர இடைவெளியை நிலைநிறுத்தலாம்.

நாடு முழுவதும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது புதிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோர் தரப்பில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதா? இல்லையா என்ற மனப்போராட்டத்தில் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குத் தைரியம் தரும் நடவடிக்கைகளையும் ஆலோசனைகளையும் அரசாங்கம் குறிப்பாக கல்வி அமைச்சு முன்னெடுக்க வேண்டும்.

பள்ளி வளாகத்திற்குள் விதிக்கப்பட்டிருக்கும் எஸ்ஓபி விதிமுறைகளைக் கடுமையாய் பின்பற்றும் மாணவர்கள், பள்ளிக்கு வெளியே அப்படி இருப்பதில்லை. வெளியில் அவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

அதே சமயத்தில் மாணவர் போக்குவரத்து தொடர்பில் நிறையவே கவனம் செலுத்த வேண்டிய கட்டாயமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது. பள்ளி வேன்கள், பேருந்துகளில் மாணவர் எண்ணிக்கை கண்டிப்பாக குறைக்கப்பட வேண்டும். பள்ளி நேர சுழற்சி முறை இதற்குக் கைகொடுக்கும்.

ஆரம்பப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்று கல்வித் துறைகளில் இதுவரை 90 வகையான கொரோனா திரள்கள் (கிளாஸ்டர்) பதிவு செய்யப்பட்டிருப்பதை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா உறுதிசெய்திருக்கிறார்.

ஜனவரி 1ஆம் தேதிக்குப் பின்னர் கல்வித்துறைகளில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது. மொத்தம் 90 வகையான திரள்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்ற நிலையில் 53 திரள்கள் வீரியம் பெற்றிருக்கின்றன.

இந்நிலையில் புதிய தொற்றுகள் பதிவாகும் பள்ளிகள் மட்டும் இரண்டு நாட்களுக்கு மூடப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருக்கிறது.

அதே  சமயம் அது குறித்து பெற்றோருக்குப் பள்ளி நிர்வாகம் முறையாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.

எல்லாப் பள்ளிகளும் மூடப்பட்டால் எதிர்மறையான சிக்கல்களே தலைதூக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஏற்கெனவே, பிள்ளைகளின் கல்வி நிலை மோசமான கட்டத்தை எட்டியிருக்கின்ற நிலையில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டால் அது சாதகங்களைக் காட்டிலும் பாதகங்களையே அதிகமாகக் கொண்டு வரும் என்பது திண்ணம்.

பெற்றோரும் அவசரப்படாமல் பள்ளி நிர்வாகங்களுடன் தொடர்புகொண்டு ஆகக் கடைசியான நிலவரங்களைத் தெரிந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here