கோவில்கள் உடைபட அனுமதிக்க மாட்டோம்

துணை முதலமைச்சர்  இராமசாமி திட்டவட்டம்

பினாங்கில் கோவில்கள் உடைபடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று துணை முதலமைச்சர் பேராசிரியர் ப. இராமசாமி திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

பெனாந்தி தோட்ட ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் கோவில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. 135 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தை அங்கிருந்து எடுப்பதற்கு சீன நில உரிமையாளர் நீதிமன்ற வழக்குத் தொடுத்துள்ளார்.

அன்னை ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் அருளால் வழக்கின் தீர்ப்பு கோவிலுக்குச் சாதகமாக முடியும் என்று பேராசிரியர் இராமசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் நன்னீராட்டு விழாவில் பேராசிரியர் இராமசாமி பேசினார்.

பினாங்கில் கோவில்களை உடைக்க பல தடவை முயற்சி நடந்தது. ஆனால், உடனடி நடவடிக்கையாக நானே நேரில் சென்று அந்த முயற்சியைத் தகர்த்தெறிந்தேன்.

கோவில்களை உடைக்கும் எந்த முயற்சியும் பினாங்கில் எடுபடாது. சுங்கை கெச்சில் எனும் இடத்தில் முனீஸ்வரர் கோவிலை உடைக்கும் முயற்சியை முறியடித்தேன்.

கோவிட்-19 காலத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கு 23 இந்தியக் குடும்பங்களில் முதியவர்கள் அதிகம் பேர் இருந்தனர்.
பினாங்கு முதலமைச்சருடன் பேசி கோவில் உடைப்பை நிறுத்தினார்.

இப்படியெல்லாம் பாடுபடும் என்னைக் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் எனக் கூறுகின்றனர்.

இந்தியர்கள், தமிழர்கள் தமிழ்மொழியை உயிராய் மதிப்பவர்கள். தமிழ்மொழிக்கும் கோவில்களுக்கும் பிரச்சினை என்றால் முன்நின்று காப்பேன்.

கெடா மாநிலத்தில் கோவில் உடைபட்டபோது குரல் கொடுத்தேன். அந்த மாநில மந்திரி பெசார் பினாங்கிற்கு கோவில்களைக் கொண்டு போ என சவடால் பேசுகிறார்.

சுங்கை உலார் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்ட இலவச நிலம் பற்றி கெடா மந்திரி பெசார் கேள்வி எழுப்புகிறார். தமிழ்ப்பள்ளி, கோவில்கள் எங்கிருந்தாலும் அவற்றுக்கு அழிவு ஏற்பட்டால் கண்டனக் குரல் எழுப்புவேன்.

முருகன், சிவன், அம்மன் வழிபாடு தமிழில் இருந்தது. ஆரியர்கள் திட்டமிட்டு சமஸ்கிருதத்தில் மாற்றி விட்டனர். முனீஸ்வரர் வழிபாடு பல்லாண்டு காலம் இருக்கிறது.

இப்போது சிலர் இந்து மதத்தலைவர் எனும் பெயரில் தமிழில் உள்ளதை எல்லாம் மாற்றும் முயற்சியைக் கொண்டுள்ளனர்.

கோவில் உடைபடும்போது அறிக்கை மட்டுமே இந்து தலைவரால் வெளியிட முடியும். பினாங்கு மாநில அரசாங்கத்தில் இருந்துகொண்டு இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் நல்லனவற்றைப் பெற்றுத் தருவேன். இவ்வாறு பேராசிரியர் இராமசாமி பேசினார்.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, பெனாந்தி தோட்ட ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலய நிலப் பிரச்சினை கவுன்சிலராக இருந்தபோதே தெரியும் என்றார்.

பாழடைந்த நிலையில் இருந்த கோவில் திருப்பணிக்குப் பின்னர் நன்னீராட்டு விழா நடைபெறுகிறது. கோவிலின் நிலப்பிர்ச்சினையால் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று சதீஷ் முனியாண்டி நம்பிக்கை தெரிவித்தார்.

பினாங்கு, பெனாந்தி தோட்டம் அருள்மாமணி என்.டி.எஸ். ஆறுமுகம்பிள்ளைக்குச் சொந்தமானது. அந்தத் தோட்டத்தை 1957இல் அருள்மாமணி வாங்கி விற்றபோது சீனர்கள் வாங்கிவிட்டனர்.

அந்தச் சமயத்தில் தோட்டத்தில் 1885ஆம் ஆண்டு தேக்கு மரத்தால் கட்டப்பட்ட ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலயமும் வீற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.மலையாண்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here