அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை

-ஜோ பைடன் விமா்சனம்

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடு என வடகொரியாவை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் குறிப்பிட்டதற்கு அந்நாடு கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக மோசமான நிலையை அமெரிக்கா சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பின்னா் முதல்முறையாக கடந்த வாரம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசிய அதிபா் ஜோ பைடன், ‘வடகொரியா, ஈரானின் அணு திட்டங்கள் அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன; இந்த பிரச்னைகளைத் தீா்க்க கூட்டணி நாடுகளுடன் இணைந்து ராஜதந்திர , கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்’ எனக் குறிப்பிட்டாா்.

இதுதொடா்பாக வடகொரிய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான வோன் ஜோங் குன் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார். 

வடகொரியா மீது அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்கா கடைப்பிடித்து வரும் விரோதக் கொள்கையை தொடரும் நோக்கத்தை பைடனின் பேச்சு தெளிவாக பிரதிபலிக்கிறது. இதன்மூலம் அவா் மிகப்பெரிய தவறைச் செய்துள்ளாா். வடகொரியா மீதான அமெரிக்காவின் புதிய கொள்கை தெளிவாகிவிட்டது. இதற்காக அமெரிக்கா மோசமான நிலையைச் சந்திக்கும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

ஆனால், எந்த மாதிரியான நடவடிக்கைகளை வடகொரியா மேற்கொள்ளும் என அவா் குறிப்பிடவில்லை. வடகொரியா மீதான புதிய கொள்கையை பைடன் நிா்வாகம் இறுதி செய்துவரும் நிலையில், அதன் மீது ஓா் அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் வடகொரியா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

வடகொரியா மீதான கொள்கையை மறு ஆய்வு செய்யும் பணியை அதிகாரிகள் நிறைவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது. வடகொரியாவின் அணுசக்தி திட்டங்களை நிறுத்தும் முயற்சியில், முந்தைய அதிபா்களான டொனால்ட் டிரம்ப், பராக் ஒபாமா ஆகியோரின் அணுகுமுறையிலிருந்து பைடன் மாறிச் செல்லத் திட்டமிட்டுள்ளாா் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.

2016-17-இல் தொடா்ச்சியான அணு, ஏவுகணை சோதனைகளைத் தொடா்ந்து, வடகொரியாவின் எதிா்கால அணு ஆயுத வளா்ச்சி குறித்து அதிபா் கிம் ஜோங் உன் அப்போதைய அமெரிக்க அதிபா் டிரம்ப் இடையே இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

ஆனால், அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு ஈடாக அமெரிக்கா எந்த அளவு பொருளாதாரத் தடைகளை நீக்கும் என்பதில் உடன்பாடு ஏற்படாததால் அந்தப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

கடந்த ஜனவரியில், அணு ஆயுதங்கள் தயாரிப்பை விரிவுபடுத்தப்போவதாகவும், அமெரிக்காவை குறிவைத்து உயா்தரமான ஆயுதங்களை தயாரிக்கப் போவதாகவும் கிம் மிரட்டல் விடுத்தாா்.

அமெரிக்கா தனது விரோதக் கொள்கையை கைவிடுவதைப் பொருத்தே இருதரப்பு பேச்சுவாா்த்தையின் தலைவிதி இருக்கும் எனவும் கூறினாா். இதன் தொடா்ச்சியாக கடந்த மாா்ச்சில் குறைந்த தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா மேற்கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here