எச்ஆர்டி கார்ப் பயிற்சி – பணி அமர்த்தல் பயிற்சி

 

3 ஆண்டுகளில் 3 லட்சம் நிபுணர்கள்

கோலாலம்பூர்-
இப்பிராந்தியத்தில் மைக்ரோ சாஃப்ட்டின் முதலாவது பிராந்திய ஆய்வு மையம் அமைக்கப்படுவதற்கு ஆதரவு தரும் வகையில் அடுத்த மூன்றாண்டுகளில் 3 லட்சம் மலேசிய நிபுணர்களை உருவாக்கும் பயிற்சி, பணியமர்த்தல் முயற்சிகளை மனிதவள மேம்பாட்டு கார்ப்பரேஷன் (எச்ஆர்டி கார்ப்) முன்னெடுக்கும்.

பெர்சமா மலேசியா திட்டத்தின் கீழ் எச்ஆர்டி கார்ப் – மைக்ரோசாஃப்ட் இடையே கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இப்பணி முன்னெடுக்கப்படுகின்றது.

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 400 கோடி வெள்ளியை முதலீடு செய்யும் என்று மனிதவள அமைச்ங்ர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் முன்னிலையில் கடந்த வாரம் கையொப்பமிடப்பட்ட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் நிபுணத்துவப் பங்காளிகளான மலேசிய நிர்வாக நவீனத்துவம் , நிர்வாகத் திட்டமிடல் பிரிவு (மம்பு), பெட்ரோனாஸ், செல்கோம்,  கிரேப் ஆகியவை பங்கேற்றன.

இந்த நீண்டகால முதலீட்டுத் திட்டமானது உலக தரத்திலான தரவு பாதுகாப்பு, ரகசிய காப்பு, நாட்டில் தரவுகளை சேமித்து வைக்கும் ஆற்றல் ஆகியவற்றை நம்பிக்கைக்குரிய வகையில் உள்நாட்டில் கிளாவுட் சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று எச்ஆர்டி கார்ப் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ சாகுல் ஹமிட் டாவுட் கூறினார்.

இந்தப் பங்காளித்துவத்தின் வழி மைக்ரோசாஃப்ட் அதன் டிஜிட்டல் திறன் உள்ளடகத்தைப் பகிர்ந்து கொள்ளும். அதற்குரிய சான்றிதழை எச்ஆர்டி கார்ப் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் மிகப் பொருத்தமான, சரியான தகுதியில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பங்காளித்துவத்தின் வழி எச்ஆர்டி கார்ப் மைக்ரோசாஃப்ட் நீண்ட கால கூட்டுச் சான்றிதழ் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு ஒரு புதிய களத்தை அமைத்துக் கொடுக்கும் என்று டத்தோ சாகுல் ஹமிட் தெரிவித்தார்.

புதிய திறன் மேம்பாட்டில் மலேசியர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என்று வர்ணித்த டத்தோஸ்ரீ சரவணன், இது ஒரு நீண்ட காலத்திற்கு மதிப்புமிக்க ஒரு பணியாளராக செம்மைப்படுத்தும் என்றார்.

அதே சமயத்தில் புதிய திறன்களுடன் ஆள்பலத் தேவைகளை நிறைவு செய்யும் தகுதியையும் அவர்கள் பெற்றிருப்பர் என்று அமைச்சர் சொன்னார்.

இப்பயிற்சி முழுமை பெற்றதும் இந்த 3 லட்சம் பேரும் எச்ஆர்டி கார்ப் பணியமர்த்தல் மையத்தின் வழி வேலை வாய்ப்புகளைப் பெறுவர்.

உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகங்களில் பணியில் அமரும் வாய்ப்புகளைப் பெறுவதும் இதில் அடங்கும் என்று அவர் தொடர்ந்து கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here