இந்தியப் பெண்ணை எட்டி உதைப்பதா?

முகக்கவரி அணியவில்லையாம்!
சிங்கப்பூர் பிரதமர் கண்டனம்

சிங்கப்பூர்-
 முகக்கவரி அணியவில்லை என்பதற்காக இந்திய வம்சாவளிப் பெண் எட்டி உதைக்கப்பட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டப்பட்டதை சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசாரும் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிட்-19 நெருக்கடியால் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதோடு மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கலாம்.

ஆனால் இதற்காக இனத்துவேஷ நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவரான இந்தியப் பெண் மீது தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்தவே முடியாது என்று அவர் கடுமையாக் குறிப்பிட்டார்.

இதனிடையே உள்நாட்டைச் சேர்ந்த 55 வயதான இந்தோஜா நீத்தா விஷ்ணுபாய் என்பவர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது முகக்கவரி அணியவில்லை.

மே 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை அவர் சிவா சீ காங் எம்ஆர்டி நிலையத்தில் இருந்து காலை 8.30 மணி அளவில் விளையாட்டு அரங்கம் நோக்கி மெதுவாக நடந்து சென்றபோது தாக்கப்பட்டிருக்கிறார்.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர், நடந்து வந்த வேகத்தில் மூச்சு விட சிரமப்பட்டதால் தனது முகக்கவரியை மூக்கிற்குக் கீழ் இறக்கியிருக்கிறார்.

அந்தச் சமயம் பார்த்து ஒரு நபர் அவரை நோக்கிக் கூச்சலிட்டிருக்கிறார். பின்புறமாக வந்த அந்த நபர், என்னை நோக்கிக் கூச்சலிட்டு மூக்கிற்கு மேல் முகக்கவரியை அணியுமாறு எச்சரித்தார்.

நான் உடற்பயிற்சி செய்கிறேன். இதனால்தான் மூக்கிற்குக் கீழ் முகக்கவரியை இறக்கியிருக்கிறேன் என்று நான் அவரிடம் பொறுமையாகத்தான்  சொன்னேன்.

ஆனால் 20 வயதுடைய அந்த நபர் என்னை நோக்கி மீண்டும் கூச்சலிட்டார். பின்னர் என்னை நோக்கி இனத்துவேஷமாகப் பேசத் தொடங்கினார். எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

நான் அவருடன் விவாதம் செய்ய விரும்பவில்லை இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து நடக்க விரும்பினேன்.

அப்போது அந்த நபர் என்னை நோக்கி ஓடி வந்து எட்டி உதைத்தார். அவருடைய செயல் பறந்து வந்து என்னை உதைப்பதுபோல் இருந்தது. இதனால் நான் நிலைதடுமாறி தரையில் விழுந்தேன் என்று நீத்தா கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here