சிலி காட்டுத்தீயில் பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்வு!

சிலி நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. இந்த தீ விபத்தில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் கடற்கரை நகரங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். தற்போது 40 டிகிரி செல்சியஸ் அளவிற்கு சிலி நாட்டின் பல்வேறு நகரங்களிலும் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிலி நாட்டின் வினா டெல் மார் நகருக்கு அருகேயுள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் இதுவரை 26,000 ஹெக்டர் நிலப்பரப்பிலான வனப்பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமாகி இருப்பதாகவும், சிலி நாட்டின் முக்கிய நகரமான வினா டெல் மார் பகுதியில் அமைந்திருந்த 1931ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்கா முற்றிலும் எரிந்து நாசமாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 1600 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 40 இடங்களில் காட்டுத்தீ தற்போதும் எரிந்து வருவதாகவும் இதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், அந்நாட்டு உள்துறை அமைச்சர் கேரோலினா டோஹா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொழுந்துவிட்டு எரியும் தீ காரணமாக, அதிகப்படியான வெப்பம் நிலவுவதால் தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் காட்டுத்தீ மேலும் பரவுவதற்கான அபாயம் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த தீ விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாட்கள் தேசிய அஞ்சலி செலுத்தும் தினங்களாக அனுசரிக்கப்படும் என சிலி அதிபர் கேப்ரியல் போரிக் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here