காரில்  தப்ப முயன்ற மூவர் கைது

போலீசார் வாகனமும் சேதம் – ஒருவர் காயமுற்றார் !

சிப்பாங் மே 17-
போலீஸ்காரர்களிடமிருந்து தப்பி ஓட முயன்ற மூன்று இந்திய ஆடவர்களை காவல் துறையினர் துரத்திச் சென்று கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து சிப்பாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்பிரிண்டென்டன்ட் வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப் விளக்கமளித்தார்.

நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சிப்பாங் தாமான் முர்னி பகுதியில் புரோட்டோன் வீரா ரகக் காரில் மூன்று இந்திய ஆடவர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த வேளையில் அவர்களை பின் தொடர்ந்து சென்ற காவல் துறையினர் அக்காரை நிறுத்தும் படி கூறினர்.

எனினும் காரை நிறுத்தாமல் வேகமாகச் செலுத்தியதில் மக்களின் இரண்டு கார்களை மோதினர். எனினும் நிற்காமல்  தப்பி ஓட முயன்ற அவர்களைத் துரத்திச் சென்ற காவல் துறையினரின் காரை மோதியதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தலையிலும் காலிலும் லேசான காயங்கள் ஏற்பட்டது.

இதனையடுத்து 20 வயதிலிருந்து 29 வயதிற்குட்பட்ட மூன்று இந்திய ஆடவர்களைக் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து ஷாபு வகை போதைப் பொருளைக் கைப்பற்றியதாகவும் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த இரண்டு வருடங்களாக தங்களுக்கு போதைப் பொருளில் தொடர்பு உள்ளதாக ஒப்புக்கொண்டனர் என்று அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு ஏழு குற்றப்பதிவுகளும் இன்னொருவருக்கு இரண்டு குற்றப் பதிவுகளும் உள்ள வேளையில் மேலும் ஒரு ஆடவருக்கு எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.

 

-எம்.எஸ்.மணியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here