வேலை தந்தால் பெருந்தன்மை!
உடலில் குறை உள்ளவர்கள், உடற்பேறு குறைந்தவர்கள், வேலைச் சந்தைகளில் – வாய்ப்புகளில் தொடர்ந்து பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.
மதிப்பும் மரியாதையும் இன்றி நடத்தப்படுகின்றனர். அலட்சியமும் ஒதுக்கலும் பலமாகவே தலையெடுக்கின்றன. இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அவ்வளவு எளிதில் ஒரு வேலையில் அமர்ந்து விட முடியாது. அவர்களின் உடல்களில் உள்ள குறைபாடுகள் ஒரு பெருங்குறையாகவே பார்க்கப்படுகின்றன.
அதே சமயம் வாடிக்கையாளர்களையோ சக பணியாளர்களையோ எதிர்கொள்ளும்போது இவர்கள் பெரும் பரிகாசத்திற்கு உள்ளாகின்றனர். அவர்கள் உதிர்க்கும் எதிர்மறையான சொற்கள் – வார்த்தைகள் உடலில் குறை உள்ளவர்களை நோகடிக்கின்றன.
இவர்களும் மனிதர்களே என்பதை பல சமயங்களில் முற்றாக மறக்கப்படுகின்றது – மறுக்கப்படுகின்றது. உடலில் குறையோடு பிறக்க வேண்டும் என்பது அவர்களது பிரார்த்தனையா?
உடலில் குறை உள்ளதே உடலளவில் ஒரு பின்னடைவுதான். அது மட்டுமன்றி அவர்களைப் பணியில் அமர்த்துவதற்கு முன் அவர்களுக்கான சிறப்பு வசதிகளை ஏற்பாடு செய்து தருவதற்கு செலவு செய்ய வேண்டி உள்ளது.
அது அவ்வளவு எளிது அல்ல என்று மலேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் டத்தோ ஷம்சுடின் பர்டான் தெரிவித்திருக்கிறார்.
தவிர, வெட்டுமரத் தொழில், நிர்மாணிப்பு போன்ற உடலுழைப்புத் தொழிலாளர்கள் தேவைப்படும் துறைகளில் இவர்களைக் கண்டிப்பாகப் பணியில் அமர்த்த முடியாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
ஆனால், உடலில் குறை உள்ளவர்களையும் உடற்பேறு குறைந்தவர்களையும் பணியில் அமர்த்துவதற்கு அரசாங்கம் ஊக்கமளித்து வருகிறது. அதற்காக பல்வேறு அனுகூலங்களையும் வழங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அதற்கென்று ஒரு தனிக் கொள்கையையே அரசாங்கம் வகுத்துள்ளது.
2010இல் அமல்படுத்தப்பட்ட இக்கொள்கையின் கீழ் ஒவ்வொரு நிறுவனமும் கம்பெனியும் தன்னுடைய ஆள்பலத்தில் 1 விழுக்காடு உடல் குறை உள்ளவர்களையும் பேறு குறைந்தவர்களையும் பணியில் அமர்த்த வேண்டும். இதற்கு இரட்டை வரி கழிவும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இருப்பினும் முதலாளிகள் தரப்பில் இருந்து இத்திட்டத்திற்கு போதுமான ஆதரவு இல்லை என்பது வேதனைக்குரியது. சில கம்பெனிகள் கிடைக்கப்பெறும் அனுகூலங்களுக்காக அவர்களைப் பணியில் அமர்த்துவதும் சுயநலத்தின் வெளிப்பாடே அன்றி வேறு எதுவும் இல்லை.
இவர்களுக்கு மத்தியில் சில்லறை வணிகம், சுவைபானம், உணவு உபசரணை, தொழில்நுட்பம் போன்ற துறைகள் உடலில் குறை உள்ளவர்களைப் பணியில் அமர்த்துவதில் பேரார்வம் காட்டி அதனைச் செயலிலும் நிரூபித்து வருகின்றன.
ஏயோன் குருப், மைடின், ஸ்டார்பக்ஸ், மெக்டோனால்ட்ஸ், கேஎஃப்சி போன்ற பெரும் வணிக நிறுவனங்களும் அவர்களுக்கு வாய்ப்பளித்து வாழ்க்கை தருகின்றன.
அலையன்ஸ் காப்புறுதி நிறுவனம், டிஜி தொலைத்தொடர்பு நிறுவனம், ஷெல் எண்ணெய் நிறுவனம் போன்றவையும் இவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில் முன்னுரிமை தந்து வருகின்றன.
உடல் பேறு குறை உள்ளவர்களுக்கு ஒரு வேலை என்பது எவ்வளவு முக்கியம் என்பது அவர்களை சந்தித்துப் பேசினால் நமது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து விடும்.
அவர்களும் மனிதர்கள். அவர்களும் வாழ வேண்டும். அவர்களது வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் வேண்டும். வேலை என்பதே அவர்களுக்கான ஓர் அங்கீகாரம், கௌரவம். அவர்கள் தலைநிமிர வாய்ப்பு தருபவர்கள் மதிக்கப்படக்கூடிவர்கள்
– பி.ஆர். ராஜன்