-அர்த்தம் மாறியதோ!
இன்று ஜூன் 1 தொடங்கி வரும் ஜூன் 14ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நாடு முழுமையிலும் முழு முடக்கத்தை மத்திய அரசாங்கம் பிரகடனம் செய்திருக்கிறது.
நாட்டில் கோவிட்-19 கிருமி கொடுந்தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்தி கொரோனா சங்கிலியை உடைத்து தகர்த்து சமாதி கட்டுவதற்கு இந்த முழு முடக்கம் உதவும் என்று அரசாங்கம் நம்புகிறது.
ஆனால், நாட்டில் 2020இல் மார்ச் மாதம் மத்தியில் முதன் முதலாக அரசாங்கம் அமல்படுத்திய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (எம்சிஓ) வேகமும் விவேகமும் தற்போது அமல்படுத்தப்பட இருக்கும் எம்சிஓ 3.0இல் இல்லை என்பது பரவலான மனவோட்டமாக இருக்கிறது.
முதல் எம்சிஓ காலகட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தில் தான் இருந்தது. மரண எண்ணிக்கையும் குறைவாகத்தான் பதிவானது. இருப்பினும் நாடே முற்றாக முடங்கிப்போனது. அனைத்தும் செயல் இழந்தன. மக்கள் நடமாட்டம் முற்றாக ஒடுக்கப்பட்டது.
இதன் விளைவாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஓரிலக்கத்தை எட்டியது. பொருளாதாரம் அதலபாதாளத்தில் சரிந்து கிடந்தாலும் மக்களின் ஆரோக்கியமிக்க வாழ்க்கை மீட்டுத் தரப்பட்டது.
ஆனால், இந்த மூன்றாவது அலையில் பாதிக்கப்பட்டோர் ஒரு நாள் எண்ணிக்கை 9,020. ஒரே நாளில் 98 பேர் மரணமுற்றனர். கிட்டத்தட்ட 70,000 பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற தகவல் உலகப் பதிவுகளை விஞ்சி நின்றது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் கூடிய தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அவசரக் கூட்டத்தில் 14 நாட்களுக்கு முழு முடக்கத்தை அமல்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் ஒருசில அத்தியாவசிய சேவைத் துறைகள் தவிர்த்து மற்ற அனைத்து சமூக, பொருளாதாரத் துறைகளும் செயல்படுவதற்கு முழு அளவில் அனுமதி மறுக்கப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் இக்காலகட்டத்தில் தொழிற்சாலைகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரோனிக் துறைகளும் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய துறைகளான இவற்றில் பணிபுரிவோரின் எண்ணிக்கை 6 லட்சத்திற்கும் குறையாமல் இருக்கிறது. உலகளாவிய பொருளாதாரச் சங்கிலி அறுந்துவிடக்கூடாது என்று இதற்குக் காரணம் சொல்லப்படுகிறது.
இந்த முழு முடக்கம் சாதாரண மக்களுக்குத் திண்டாட்டமாக உள்ள நிலையில் பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.
கோவிட்-19 கிருமி பெருந்தொற்று சவால்மிக்க, அபாயகரமான எல்லையைத் தொட்டிருக்கின்ற நிலையில் இந்த 14 நாட்கள் இந்த பெருநிறுவனங்களுக்குப் பெரும் இழப்பைக் கொண்டுவந்துவிடப் போகிறதா?
இதுநாள் வரையிலான அவர்களின் உற்பத்தி இந்த 14 நாட்களுக்குப் போதுமானதாக – இழப்புகளை ஈடுகட்டுவதாக இருக்காதா?
நாட்டு மக்களின் உயிரைவிட – அவர்களின் பாதுகாப்பைவிட இந்தப் பெருநிறுவனங்களின் நலன்கள்தான் முக்கியமா?
14 நாட்கள் மட்டும்தானே? முழு முடக்கத்தை அமல்படுத்தும் தைரியம் அரசாங்கத்திற்கு இல்லாமல் போனது மக்கள் மத்தியில் பல்வேறு வியாக்கியானங்களுக்கு வித்திட்டுள்ளது.
14 நாட்கள் முழு முடக்கம் என்பது உண்மையா? அதன் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் அத்தியாவசிய சேவை மற்றும் பொருளாதாரத் துறைகள் செயல்படுவதற்கு அனுமதி அளித்திருப்பதும் மக்கள் , அரசியல் தலைவர்கள் மத்தியில் விவாத மேடைகளாக மாறியிருக்கின்றன.
முழு முடக்கம் முக்கால் வாசி முடக்கமாக மாறி இருப்பதுதான் நிதர்சன உண்மை.
– பி.ஆர். ராஜன்