கிள்ளான் செட்டி பாடாங் விவகாரம் வெற்றி பெறுமா?

வாசகர் கேள்வியும் ஓசையின் பதிலும்

அன்பிற்கினியன்

கிள்ளான்

கேள்வி: வரலாற்றைப்பதிவு செய்திருக்கும்  கிள்ளான் செட்டி பாடாங் விவகாரம் தொடர்பான  முயற்சி வெற்றி பெறுமா? 

ஓசை பதில்;

கடந்த சில வாரங்களாக இந்திய சமூகத்தினரிடையே விவாதிக்கப்பட்ட கிள்ளான் செட்டி பாடாங் பெயர் மாற்ற விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அமாட் ஃபட்சிலி அமாட் தாஜுடின் நேற்று முன் தினம் மாலையில் வெளியிட்ட ஒரு பத்திரிகை அறிக்கையில் இவ்விவகாரம் குறித்து தெளிவுப்படுத்தியிருந்தார்.

கிள்ளான் நகராண்மைக் கழக இந்தியப் பிரதிநிதிகள் எழுவருடன் நடந்த முக்கிய சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர் அறிக்கையை அவர் வெளியிட்டார்.

கிள்ளான் நகராண்மைக் கழகம் வரலாற்றுமிக்க கிள்ளான் செட்டி பாடாங் என்ற பெயரை மாற்றி டத்தாரான் மஜ்லிஸ் பெர்பண்டாரான் கிளாங் எனப் பெயர் மாற்றம் செய்ததால் பல சர்ச்சைகள் எழுந்தன.

தாம் கூறிய சில விளக்கங்களை பத்திரிகை ஒன்று (மக்கள் ஓசை அல்ல) திரித்து எழுதியதால் இவ்விவகாரம் சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்ததாகக் கூறிய அவர், அவ்விடத்தில் புதிய பெயர் பதிக்கப் பட்டிருந்தாலும் அது முடிவல்ல என விளக்கமளித்த அவர், அது தொடர்பில் பல பேச்சுவார்த்தைகள் கிள்ளான் நகராண்மைக் கழக உயர்மட்டத்திலும் ஏழு இந்திய பிரதிநிதிகளுடனும் நடத்தப்பட்டு வந்தது.

இதனிடையே, கடந்த மாதம் 25ஆம் தேதி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங், போர்ட் கிளாங் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஆகியோரும் இவ்விவகாரம் குறித்து நேரடியாக வந்து சந்தித்து விளக்கமளித்ததுடன் சில பரிந்துரைகளையும் முன் வைத்தனர்.

இந்தப் பெயர் மாற்ற விவகாரம் இன விவகாரமாகாமல் நிபுணத்துவ முறையில் கையாள வேண்டும் என்ற அடிப்படையில், மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் பார்வைக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்ததாக குறிப்பிட்டார்.

நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட செட்டி பாடாங் பெயர் மாற்றம் விவகாரத்திற்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில் பெயர் பதிக்கப்பட்டிருக்கும் அந்த பெயர் பலகை உடனடியாக அகற்றப்படும் என   உறுதி கூறினார் டாக்டர் அமாட் ஃபட்சிலி.

புதிய பெயர் விரைவில் சில மாற்றங்களுடன் பதிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், இப்பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காண்பதற்கும் பல பிரச்சினைகளை களைவதற்கும் உறுதுணையாக இருந்து செயல்பட்ட கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 

செய்தி: பி ஆர்.ஜெயசீலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here