19 வருடங்கள்.. ஜெ.மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியான ஜி. சம்பந்தம் காலமானார்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பின் வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த ஜி. சம்பந்தம் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.அவருக்கு வயது 62.

1996-ல் பரபரப்பாக பேசப்பட்டது ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 மீதான சொத்துகுவிப்பு வழக்கு.. இவர்கள் இணைந்து 66 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்து கொண்டதாக புகார் எழுந்தது. அப்போது, தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளர் நல்லம்ம நாயுடு தலைமையிலான‌ விசாரணை குழு இதை விசாரித்து வந்தது.

குற்றப்பத்திரிகை அடுத்த வருடம் அதாவது 1997, டிசம்பர் மாதம் இந்த விசாரணைக்குழுவில் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டவர்தான் ஜி.சம்பந்தம். இந்த வழக்கு சம்பந்தமான குற்றப்பத்திரிகை தாக்கல் முதல், சாட்சியங்களின் விசாரணை, சொத்துகளின் மதிப்பீடு, போன்ற பணிகளில் நல்லம்ம நாயுடுவுடன் இணைந்து செயல்பட்டு வந்தார் சம்பந்தம். இதற்கு பிறகு 2 முறை தேர்தல்கள் நடந்து, திமுக, அதிமுக என ஆட்சிகள் மாறியபோதுகூட சம்பந்தம் அதே பணியில் நீடித்து வந்தார்.

அதற்கு காரணம், இந்த வழக்கை பற்றி இவருக்குதான் நன்றாக தெரியும் என்பதால், வேறு யாருமே இவருக்கு பதிலாக மாற்றப்படவில்லை.. இந்த வழக்கு, 2004-ல் பெங்களூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டபோதுகூட, சம்பந்தமும் பெங்களூரு அனுப்பப்பட்டார். இதே வழக்கில் ஜெயலலிதா தரப்பு சாட்சியாக கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தவர் இதே சம்பந்தம்தான்.

இதை அப்போது மறைந்த கருணாநிதி கடுமையாக விமர்சித்தும் இருந்தார். இப்படி பலவித பரபரப்புகளை கடந்த காலங்களில் ஏற்படுத்தியவர்தான் சம்பந்தம். சென்னை கோர்ட், கர்நாடகா ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் என இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் மட்டும் மொத்தம் 19 வருஷங்கள் பணியாற்றி உள்ளார் சம்பந்தம். கடந்த 2016ல் ரிடையர் ஆகிவிட்டார்.  குடும்பத்துடன் செங்கல்பட்டில் வசித்து வந்தார்..

இந்நிலையில் சம்பந்தத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதனால் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையும் தரப்பட்டு வந்த நிலையில், பலனளிக்காமல் சம்பந்தம் உயிரிழந்தார். இவர் சிறப்பாக பணியாற்றியதால் 2007-ல் குடியரசு தலைவரின் சிறந்த சேவைக்கான விருதினையும் பெற்றார்.. அதேபோல, 2009-ல் அவருக்கு துணைக் கண்காணிப்பாளர் பதவி உயர்வும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here