Sop விதியை மீறுபவர் என் மகனேயாயினும் சட்டம் தன் கடமையைச் செய்யும்; தற்காப்பு அமைச்சர் உறுதி!

பெட்டாலிங் ஜெயா (ஜூன் 9): தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறினால், யாரும் சட்டத்திலிருந்து விடுபட முடியாது என்று டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், என்னுடைய சொந்த மகனே SOP யை மீறினாலும் சட்டத்தின் படி தண்டனை கிடைக்கும் என்றும் இந்தச் சட்டம் அனைவருக்கும் சமமாகக் கடைப்பிடிக்கப்படும் என்றும்  உறுதியளித்தார்.

ஒரு நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது மகன் கடாபி இஸ்மாயில் சப்ரி (பிரபலமாக டாஃபி என அழைக்கப்படுபவர்) உட்பட பலர் நீதிபதிகளாக பங்கேற்றனர். அதில் சிலர் முகக்கவசம் அணியாததால் இச் செயல் கோவிட் -19 நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) பின்பற்றவில்லை என்று எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது சம்மந்தமாக “தேசிய பாதுகாப்பு கவுன்சில் (NSC) விசாரித்து வருகிறது என்றும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமமே என்றும் “எஸ்ஓபியை மீறும் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் யாராக இருந்தாலும் சரி. அந்த நபர் எனது மகன் என்றாலும் கூட” என்று  இஸ்மாயில் சப்ரி மலேசியாகினியிடம் இன்று (ஜூன் 9) தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான All Together Now என்கிற பாடல் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் பங்கேற்ற பிரபலங்கள் சிலர் முகக்கவசம் அணியாது இருந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இந்த நிகழ்ச்சி SOP ஐ மீறியதாகக் கூறப்பட்டு வந்தது.

மேலும் இந்த எஸ்ஓபி மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகம் சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து அந்த ரியாலிட்டி ஷோவை அந் நிறுவனம் நிறுத்தியதாக தெரிய வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here