துருக்கி இயங்கலை புத்தாக்கப் போட்டியில் நிபோங் தெபால் தமிழ்ப்பள்ளி 3 பதக்கங்களை வென்று சாதனை!

நிபோங் தெபால்(ஜூன்12- கவின்மலர்): துருக்கியில் நடைபெற்ற 2021  ஆம் ஆண்டு இயங்கலைப் புத்தாக்கப் போட்டியில் பினாங்கு தென் செபெராங் பிறை நிபோங் தெபால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்று பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் சு.நடராஜன் தெரிவித்தார்.

அனைத்துலக அளவில் நடைபெற்ற துருக்கி INTOC 2021, இயங்கலைப் புத்தாக்கப் போட்டியில் நிபோங் தெபால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்  வெற்றிப் பதக்கங்களைப் பெற்று உலகளாவிய நிலையில் சாதனை படைத்துள்ளனர் என்பது பெருமைக்குரியதாகும்.

இப்போட்டியின் இறுதிச் சுற்றில் மொத்தம் 21 நாடுகளைச் சேர்ந்த 180 குழுக்கள் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தோனேசியாவில் நடைபெற்ற இதன் முதல் சுற்றில் இப்பள்ளியின் சார்பில் ஏழு குழுக்கள் கலந்துகொண்டன. இப்பள்ளியின் சாதனை நட்சத்திரங்கள் பன்னாட்டு புத்தாக்கப் போட்டியில்  முதல் முறையாகக் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும் என்று அவர் சொன்னார்.

அவ்வகையில் இறுதிச் சுற்றில் கலந்துகொண்டு மூலிகை தலையணை (Herbal pillow) தயாரித்து தங்கப்பதக்கம் பெற்ற குழுவினர் டர்ஷன் த/பெ முருகன், ஜீவனேஸ்வரி த/பெ குமரன், மனோஜ் த/ பெ ஜெயகுமார், சுரேஷ் த/ பெ தங்கராஜா, லிரோஷான் த/பெ கோகிலன் ஆகியோராவர். தாவர கழிவில் உருவாக்கப்பட்ட இயற்கை உரம்  (PADDY HUSK, SOY BEAN WASTE, BANANA PEEL FERTILIZER) உருவாக்கிய அபினயா த/பெ கலைக்குமார் ஹரிஸ் த/பெ ஐயாவு, கௌதம் த/பெ சோலையப்பன், தானுஸ்ரீ த/பெ தனபாலசிங்கம், யாழினி த/பெ வேல்முருகன் ஆகிய குழுவினர் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். இயற்கை தாவர பூச்சிக்கொல்லி (ECO NATURAL PESTICADE) தயாரித்த குழுவினர் டஸ்வின் த/பெ நடராஜன், டினேஷா த/பெ மூர்த்தி, லவீனா த/பெ தங்கராஜூ, நர்மிதா த/பெ வீரன், ஷஷினா த/பெ தனசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் மற்றொரு வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

தலைமையாசிரியர் கோகிலவாணி
தலைமையாசிரியர் கோகிலவாணி

இப்போட்டியில் கலந்துகொள்ள முழு முயற்சிகளை மேற்கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பெற்றோர் – ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுக்கும் குறிப்பாக மாணவர்களின் பயிற்றுநராகச் செயல்பட்ட ஆசிரியர் மோகனுக்கும் பள்ளியின் தலைமையாசிரியர் கோகிலவாணி தமது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். அதே போன்ற வாழ்த்துகளையும் பாராட்டையும் பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் நடராஜனும் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here