வெடிகள் அகற்றும் சாதனை எலி மகாவாவுக்கு தங்கப் பதக்கம்

 புதிய எலிகள் குழு நியமனம்!

எலிகள் வெறுக்கப்படுவதாக இருந்தாலும் அவற்றாலும் பயன் இருக்கிறது. மிகவும் ஆபத்தான வேலைக்கு எலிதான் சூப்பர் ஸ்டார்!

கம்போடியாவில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக புதிய எலிகள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

கம்போடியா நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு பகுதிகளில் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகளில் சிக்கி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததால், அவற்றை அகற்றுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

இந்தப் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பணிகள் மிகவும் தாமதமாகும் என்பதால், விலங்குகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எலிகளைக் கொண்டு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்தப் பணியில் மகாவா என்ற எலி சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றியது. கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பதில் அசாத்திய திறமை கொண்ட இந்த எலி, தன்னுடைய பணிக்காலத்தில் இதுவரை 71 கண்ணிவெடிகளை கண்டுபிடித்துள்ளது.

மேலும், செயலிழந்த கண்ணிவெடி களையும் அடையாளம் காட்டியுள்ளது. இதன் மிகச் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் விதமாக இங்கிலாந்து விலங்குகள் நல அமைப்பு, எலி மகாவாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவப்படுத்தியது.

அந்த அமைப்பின் 77 ஆண்டுகால வரலாற்றில் எலி ஒன்று தங்கப்பதக்கம் பெறுவது இதுவே முதன்முறையாகும்.

தற்போது மகாவா எலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், கண்ணி வெடிகளை அடையாளம் காண புதிய எலிகள் குழு, கம்போடியா அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

கண்ணிவெடிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் பயிற்சியை எலிகளுக்கு அபோபா என்ற தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. எலிகள் மோப்ப சக்தி மூலம் கண்ணிவெடிகளை அடையாளம் காண்கின்றன.

தான்சானியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அபோபா அமைப்பு நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க எலிகளுக்கு பயிற்சி வழங்கி, அதில் சிறப்பாக இருக்கும் எலிகளுக்கு `ஹீரோ ராட்’ என்ற சான்றிதழையும் வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here