ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் ஆக்சிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்தது. இதனால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி அலகில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி  அதன் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது, ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட திரவ ஆக்சிஜனின் அளவு குறித்தும் ஆக்சிஜன் வாயு உருளைகள் அனுப்பப்பட்ட விவரங்கள் குறித்தும் தகவல்கள் பரிமாறப்பட்டன.

அக்கூட்டத்தில் பேசிய ஆலை எதிர்ப்பாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகும் வேதாந்தா நிறுவனம் பணியை தொடருமோ என்று அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. காலத்தை தாண்டி ஆலை இயங்குவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை மீறினால் மீண்டும் தூத்துக்குடியில் நிச்சயம் போராட்டம் எழும் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை என தெரிவித்திருக்கிறார். மத்திய சுகாதாரத்துறை புதிய அமைச்சர் நேரம் தந்தவுடன் அவரை சந்தித்து பேசுவோம் என்றும் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here