வழக்கமாக ஹேக்கிங் கும்பல் தனியார் நிறுவனங்கள், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை ஹேக் செய்து அதிலுள்ள தரவுகளைத் திருடுவார்கள். திருடிவிட்டு அதை இணையத்தில் கசிய விட வேண்டுமென்றால் லம்பான தொகையை பிட் காயின் வடிவில் செலுத்துமாறு மிரட்டல் விடுப்பார்கள்.
கணினியில் புகுந்துவிடும் ஆசாமிகள் இந்த ஹேக்கிங் கும்பலில் ஈடுபடும். அதேபோல இதை வைத்தே வங்கி ஏடிஎம்களையும் ஹேக் செய்து பணத்தை ஆட்டையைப் போடும். தற்போது வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கிலேயே கைவரிசை காட்டுகின்றனர்.
முன்பெல்லாம் போன் செய்து வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டு எண் என அனைத்தையும் நைச்சியமாகப் பேசி அதன்மூலம் பணம் பறித்துவந்தனர். தற்போது வேறொரு வழியை சீனாவைச் சேர்ந்த ஹேக்கிங் கும்பல் களமிறக்கியுள்ளது.
அதாவது உங்கள் வாட்ஸ்அப் அல்லது போன் நம்பருக்கு லிங்க் மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புகிறார்கள். அதிகாரப்பூர்வமற்ற வங்கி அல்லாத மூன்றாம் தர இணையத்தள லிங்கை அனுப்புகிறார்கள். அந்தச் செய்தில் 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக ஆசை வலை விரிக்கிறார்கள்.
அந்தப் பரிசைப் பெற வேண்டுமென்றால் அந்த இணையத்தள லிங்கில் சென்று வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யுமாறு பணிக்கிறார்கள். இதனை நம்பி அனைத்து விவரங்களையும் பறித்துக்கொண்டு வாடிக்கையாளர்கள் போன் நம்பருக்கு வரும் பாதுகாப்பான ஓடிபியையும் (One Time Password) பெற்றுக்கொள்கிறார்கள். இது கிடைத்தவுடன் அவர்களின் கணக்கிலிருந்து மொத்த பணத்தையும் நைஷாக உருவுகிறார்கள் ஹேக்கர் கும்பல்.
இவர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களேயே குறிவைக்கிறார்கள். இதுதொடர்பாக பலர் பணத்தை இழந்து புகார் அளித்த பிறகே இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் இதுதொடர்பாக ஆய்வுசெய்து பார்த்ததில் சீனாவைச் சேர்ந்த ஹேக்கிங் கும்பல் தான் இதைச் செய்வதாகக் கண்டுபிடித்துள்ளனர். ஆகவே இம்மாதிரியான குறுஞ்செய்திகள் வந்தால் கண்டுகொள்ளாமல் விடுமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.