எத்தனை நாள்கள் கழித்து செய்துகொள்ளலாம்?
கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையிலிந்து திரும்பியதும், எத்தனை நாள்கள் கழித்து மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யலாம் என்பதற்கு மருத்துவர்கள் கூறும் பதில் என்ன?
கொரோனா தொற்றுக்குள்ளாகி ஏராளமான நபர்கள் மீண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு நீண்டகால பிரசிச்னைகள் இருப்பதையும் கண்டுபிடிக்கிறோம். கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் ஓரளவுக்கு தொடர்ச்சியான சிகிச்சைகளை, பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
எல்லோருமே வருடம் ஒருமுறை பொதுவான ஹெல்த் செக்கப் மேற்கொள்வது நல்லது. அதிலும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு அது இன்னும் அவசியமாகிறது.
ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றனவா, அவற்றுக்கு சிகிச்சைகள் தேவையா என்பதை அதில் தெரிந்துகொள்ளலாம்.
உடல்நலம் சரியில்லாதவர்கள் அந்த நேரத்தில் ஹெல்த் செக்கப் செய்ய வேண்டாம் என்றே அறிவுறுத்தப்படுவார்கள். ஏனெனில் அந்த நேரத்தில் அவர்களுக்கு ரத்தப் பரிசோதனைகள் செய்தால் அவற்றின் முடிவுகள் சரியாக இருக்காது. அதனால்தான் நோயிலிருந்து மீண்டு வந்த பிறகே ஹெல்த் செக்கப் செய்வது நல்லது.
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள், 2 முதல் 4 வாரங்களில் மருத்துவரைச் சந்தித்து மெடிக்கல் செக்கப் செய்துகொள்வது நல்லது. நீண்டகால பிரச்சினைகள் இருந்தால் அதற்கேற்ற சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
மற்றபடி வழக்கமாக ஒருவர் மேற்கொள்ளும் ரத்தச் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு போன்றவற்றை சரிபார்க்கும் பரிசோதனைகளை கொரோனாவிலிருந்து மீண்டு வந்து 6 வாரங்கள் கழித்து செய்து பார்க்கலாம்.
அப்போது தொற்றின் பாதிப்புகள் ஓரளவுக்கு குறைந்திருக்கும். தொற்றுக்குள்ளாகி மீண்ட நபரின் உடல்நலம் எப்படியிருக்கிறது என்பதும் தெளிவாகத்தெரியும்.