ஆடிப்பிறப்பும் ஆடிமாதத்தின் சிறப்பும்

கோலாலம்பூர், ஜூலை 16:

ஆடி மாதம் பிறந்தாலே அம்பிகை ஆலயங்களில் கூழ் ஊற்றி வழிபாடு செய்வதுதான் எல்லோருக்கும் ஞாபகத்திற்கு வரும் . நாளை ஜூலை 17 அன்று தமிழ் நாட்காட்டியில் ஆடி மாதம் பிறக்க உள்ளது. எல்லா மாதங்களும் நாட்களும் சிறப்பு வாய்ந்தவை தான். ஆனால் எமது முன்னோர்கள் ஆடி மாதத்திற்கு தனிச்சிறப்பினை கொடுத்து, அம்பாள் நோன்பு நோற்ற காலமான இவ் ஆடி மாதம் முழுதும் சிறப்பு வழிபாடுகள் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

ஆடிப்பிறப்பை தமிழ்நாட்டில் ஆடிப்பெருக்கு என்று அழைப்பார்கள். இலங்கையில் நவாலியூர் சோமசுந்தர புலவர் பாடிய “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே. கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே …” என்ற பாடல்  ஈழத்து இந்துக்கள் மத்தியில் மிகப் பிரபலமானது.

இந்துதர்ம சாஸ்திரங்களின் படி வருடத்தின் முதல் ஆறு மாதங்களை (ஜனவரி முதல் ஜூன் ) சூரியன் வடக்குத் திசை நோக்கி நகரும் காலத்தை உத்தராயண காலம் என்றும் , அடுத்த ஆறு மாதத்தை (ஜூலை முதல் டிசம்பர்) சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலத்தை தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். இத்தட்சணாயன காலத்தின் முதல் நாளே ஆடிப்பிறப்பு. இந்த  ஆடி மாதத்தில் சூரியனிடமிருந்து அதிக சக்தி வெளிப்படும். மேலும் இக்காலத்தில் சூடு படிப்படியாக குறைந்து குளிர்ச்சி ஆரம்பிக்கின்றது.

மேலும் இத்தட்சணாயன கலத்தை தேவர்களுடன் தொடர்புபடுத்தி, தேவர்களுக்கு ஒரு வருடம் ஒருநாள். தேவர்களுக்கு பகல் காலம் முடிந்து இராக்காலத்தின் ஆரம்பமாகவே ஆடிப்பிறப்பு விளங்குகின்றது. அவர்கள் இறைவனை வழிபடும் மாலை நேரங்களில் நாமும் வழிபட்டு இறை அருளைப் பெறுகின்றோம் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் “ஆடிப்பட்டம் தேடி விதை” என்பார்கள். அதாவது விதை விதைப்பதற்கு ஏற்ற காலமாகவும் இம்மாதம் இருக்கிறது. ஆடி மாதத்தில் வரும் 18 ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது. புதிதாக திருமணமான தம்பதியினர் தங்களது மாலைகளை ஆற்றில் விடுவதும், தாலிக் கயிறையும் மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆடிப்பிறப்பு அன்று வீடுகளில் கூழ் காய்ச்சி அம்பாளுக்கு படைத்து வழிபடுவார்கள். மேலும் இம்மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு போன்ற நாட்களில் சிறப்பான வழிபாடு இன்றும் நடைபெற்று வருகின்றது. மேலும் ஆடிமாதத்தில் வரும் ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகையும் சிறப்பான வழிபாட்டு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. “ஆடி அமாவாசை” இறந்த தந்தை , சகோதரர்களுக்கான சிறப்பு வழிபாட்டு நாளாக வழிபாடு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மகாபாரத போரினை ஆடி முதல் நாளிலேயே அரவானை பலிகொடுத்து பாண்டவர்கள் தொடங்கினார்கள் என்றும் அதனை நினைவுகூறும் முகமாக இன்றும் தமிழ் நாட்டில் தேங்காய் சுடும் வைபவம் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

ஆடிச்செவ்வாய்
பொதுவாகவே செவ்வாய் அம்பாளுக்கு உகந்த நாள். இந்த நாட்களில் அம்பாளுக்கு அரளிப்பூவால் அர்ச்சனை செய்து எலுமிச்சம் பழத்தால் விளக்கு போட்டு வழிபடுவார்கள். மேலும் இக்காலங்களில் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.

ஆடி வெள்ளி
ஆடி வெள்ளியில் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்யலாம். மேலும் இந்த வெள்ளிக்கிழமைகளில் வேப்பமரத்தை வழிபாடு செய்வார்கள். இந்த ஆடி மாதத்தில் காற்று அதிகமாக வீசும். “ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் “ என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். இக்காற்றால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால் வீட்டு வாசல்களில் வேப்பிலை கட்டியிருப்பார்கள்.

விஞ்ஞானம் வளர முன்னரே தொற்று நோயை தவிர்ப்பதற்காகவும் நல்ல சுத்தமான காற்றை பெறுவதற்கும், மேலும் பல மருத்துவ நன்மை கருதியே நம் முன்னோர்கள் வேப்பமரத்தை வழிபட்டு வந்தனர். இன்றும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் வேப்பமரத்திற்கு மஞ்சள் ,குங்குமம் பூசி வழிபடுவார்கள். வேப்பமரம் இல்லாதவர்கள் வேப்பிலையை ஒடித்து வந்து பூஜைக்கு வைக்கும் கலசத்தில் தண்ணீர் விட்டு ஒரு எலுமிச்சம் பழம் ஒன்று போட்டு, அவ்வேப்பிலையையும் வைத்து அம்பாளை வழிபடுவார்கள்.

ஆடி ஞாயிறு
இந்த ஆடி ஞாயிறு அன்னதானத்திற்கு உகந்த நாள். கூழ் காய்ச்சி அம்பிகைக்கு படைத்து அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கோ ஏழை எளியவர்களுக்கு கொடுப்பார்கள்.

எனவே இவ் ஆடி மாதத்தில் அம்பிகையினை வழிபட்டு வாழ்வில் அனைத்து செளபாக்கியங்களையும் பெற்றுக் கொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here