தென்னாப்பிரிக்க கிளர்ச்சிக் கதை.

பற்றி எரியும் பின்னணிகாரணமான இந்திய ‘குப்தாக்கள்’ 

ஜோகன்ஸ்பெர்க்:

தென்னாப்பிரிக்காவில் போராட்டங்கள் வெடித்து 70 பேர் பலியாகி உள்ளனர். தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் வணிக நிறுவனங்கள் குறிவைத்து சூறையாடப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இத்தனைக்கும் காரணம் மாஜி அதிபர் ஜேக்கப் ஜூமா சிறைக்கு போனதால் மட்டுமல்ல.. ஜூமாவை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்ட 3 இந்திய குப்தா சகோதரர்களால்தான்!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜய் குப்தா, அதுல் குப்தா, ராஜேஷ் குப்தா ஆகிய 3 சகோதரர்களும் 1990களில் தென்னாப்பிரிக்காவுக்கு செல்கின்றனர். தொடக்கத்தில் தங்களது கார்களில் ஷூக்களை வைத்து விற்பனை செய்து வந்த ஏழ்மை நிலையில்தான் இந்த குப்தா பிரதர்ஸ் இருந்தனர்.

பின்னர் சஹாரா கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை 3 குப்தா சகோதரர்களும் தொடங்குகின்றனர். தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய லஞ்சம் ஊழல் குப்தா சகோதரர்களுக்கு சாதகமாகிறது.. மெல்ல மெல்ல தங்களது வர்த்தக் சாம்ராஜ்ஜியத்தை கொல்லைப்புற அரசியல் உறவுகளுடன் விரிவாக்கம் செய்கின்றனர்.

ஜூப்தா சாம்ராஜ்ஜியம்

இப்படித்தான் 2009 முதல் 2018-  ஆம் ஆண்டு அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமாவுக்கும் நெருக்கமாகினர் இந்த குப்தா சகோதரர்கள். இதனால் ஜேக்கப் ஜூமாவுக்கு அவரது அரசியல் எதிரிகள் சூட்டிய பெயர் ஜூப்தா என்பது. 2015-16  ஆம் ஆண்டு காலத்தில் சஹாரா கம்ப்யூட்டர் நிறுவன நிகழ்ச்சியில் ஜூமா பங்கேற்றதில் இருந்து இந்த ஜூப்தா சாம்ராஜ்ஜியத்தின் அத்தியாயம் தொடங்கியது.

கோபத்தின் தொடக்கம்

2013- ஆம் ஆண்டு குப்தா சகோதரர்கள் வீட்டு திருமணத்துக்காக ராணுவ விமான தளத்தைப் பயன்படுத்தி விருந்தினர்களை விமானம் மூலம் அழைத்து வந்தனர் குப்தாக்கள். தங்களது நாட்டு தலைவர்களைத் தவிர பிறர் யாரும் பயன்படுத்த முடியாத ராணுவ விமான தளத்தை குப்தா சகோதரர்கள் சொந்த வீட்டு நிகழ்ச்சிக்காக பயன்படுத்தியது தென்னாப்பிரிக்கர்களை கொந்தளிக்க வைத்தது.

குப்தாக்களின் உச்சகட்ட ஆட்டம்

2016- ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அரசியலில் பெரும் சூறாவளி வீசியது. தென்னாப்பிரிக்கா துணை நிதி அமைச்சராக இருந்தவருக்கு நிதி அமைச்சர் பதவி தர 600 மில்லியன் ரேன்ட்ஸ் பேரம் பேசினர் குப்தா சகோதரர்கள் என்பதுதான் அது. அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரவீன் கோர்தன் குப்தா சகோதரர்களின் கொட்டத்தை பகிரங்கமாகவே அம்பலப்படுத்தி இருந்தார். அந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தென்னாப்பிரிக்க காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

அன்றே வெடித்த போராட்டங்கள்

2017- ஆம் ஆண்டு குப்தா சகோதரர்கள்- தென்னாப்பிரிக்கா அரசாங்கத்தை எப்படியெல்லாம் ஆட்டுவித்தார்கள் என்பதற்கான ஆதாரங்களான 1 லட்சம் இ மெயில்கள் வெளியே அம்பலமாகின. அப்போது ஜேக்கப் ஜூமாவுக்கும் குப்தா பிரதர்ஸுக்கும் எதிராக தென்னாப்பிரிக்காவில் மிகப் பெரும் போராட்டங்களும் நடந்தன.

ராஜினாமா- தப்பி ஓட்டம்

2018- ஆம் ஆண்டு ஜேக்கப் ஜூமா மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. இதனால் நெருக்கடிக்குள்ளான ஜேக்கப் ஜூமாவை ராஜினாமா செய்ய சொன்னது தென்னாப்பிரிக்கா காங்கிரஸ். ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியில் இருந்து விலக குப்தா சகோதரர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்து துபாய்க்கு தப்பி ஓடினர்.

சிறையில் ஜூமா- எரியும் தேசம்

1999-  இல் ஜேக்கப் ஜூமா துணை அதிபராக இருந்த நடந்த ஆயுத கொள்முதல் முறைகேடு தொடர்பாக ஒரு வழக்கு; 2009-18  இல் அதிபராக இருந்த ஆட்சிக் காலத்தில் குப்தா சகோதரர்களுடன் இணைந்து தென்னாப்பிரிக்காவின் அரசு சொத்துகளை சூறையாடியது இன்னொரு வழக்கு.

இந்த வழக்குகளில்தான் இப்போது ஜேக்கப் ஜூமா சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். ஜூமாவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டு சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்படுகின்றன.

இது குப்தா சகோதரர்கள் மீதான கோபத்தின் வெளிப்பாடு என்றுதான் சொல்கின்றனர் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here