அமெரிக்காவை மாற்றுவோம்: ஜோ பிடன் திட்டவட்டம்

‘அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில், தற்போதுள்ள அமெரிக்கா இருக்காது. இழந்த பெருமையை மீட்டெடுப்போம். உலகை வழிநடத்தும் நாடாக, மீண்டும் அமெரிக்காவை மாற்றுவோம்,” என, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் உறுதியளித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தில், ஜோ பிடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும், அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.’வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் நடந்த, நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கு, ஜோ பிடன் அளித்த பதில்: ஆட்சிக்கு வந்தால், முதல், 30 நாட்களில் என்னென்ன செய்வோம் என, கேட்கின்றனர்; இந்த நாட்டுக்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது.

முதலில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் கவனம் செலுத்துவோம். பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என, நிறைய பணிகள் உள்ளன. சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள, 1.1 கோடி பேருக்கு குடியுரிமை அளிப்போம். கடந்த நான்கு ஆண்டுகளில், டிரம்பின் மோசமான நிர்வாகத்தால், இந்த நாடு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. அதையெல்லாம் சீர் செய்ய வேண்டும். சர்வதேச அளவில், அமெரிக்காவுக்கு இருந்த பெருமையை மீட்டெடுப்போம். உலக நாடுகளை வழிநடத்திச் செல்லும் நாடாக, அமெரிக்காவை மீண்டும் மாற்றுவோம்.

நிறைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. அதையெல்லாம், 30 நாட்களில் செய்ய முடியாது.ஆனால், அடுத்த, நான்கு ஆண்டுகளின் இறுதியில், இப்போதுள்ள அமெரிக்கா இருக்காது. அமெரிக்கா முழுமையாக மாறியிருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

துணை அதிபர் பதவிக்கு, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும், இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ், ”அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வி அடைந்த நிர்வாகம், டிரம்பினுடையது தான்,” என, தனியார், ‘டிவி’க்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் மகனுக்கும் தொற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியாவுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளனர். இந்நிலையில், டிரம்ப் மகன், பேரான் டிரம்புக்கும் தொற்று உறுதியாகி உள்ளதாக, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மெலனியா தெரிவித்துள்ளார்.’டுவிட்டர்’ கணக்கு முடக்கம்ஜோ பிடனின் மகன் மீது ஊழல் புகார் கூறும் செய்தியை வெளியிட்டதால், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கெலேஹ் மெக்கனானின் கணக்கை, ‘டுவிட்டர்’ சமூக வலை தளம் முடக்கி வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here