உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி?
முன்னாள் மேஜர் ஜென்ரல் எஸ்.ஜி.வோம்பாட்கெர், ‘கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான தேசத்துரோக வழக்கு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. சந்தேகத்துக்கு இடமின்றி அந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அவரது மனுவில், ‘இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124- பிரிவு ஏ தேசத்துரோகச் சட்டத்தைக் குறிக்கிறது. ஆனால், இந்தச் சட்டம் முற்றிலும் அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அரசாங்கத்தின் மீதான அதிருப்தி என்றவகையில் சட்டத்துக்கு தெளிவற்ற வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமைக்கு தேவையற்றவகையில் இந்தச் சட்டம் கட்டுப்பாடு விதிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இந்தச் சட்டம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, ‘தேசத்துரோகச் சட்டம் கோடரி போன்றது. அது மரக்கிளையை வெட்டுவதற்கு பதிலாக காட்டை அழிக்கப் பயன்படுகிறது. அந்தச் சட்டம் மிக அதிக அளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
கிராமத்தில் ஒருவனை குறிவைக்க வேண்டும் என்று ஒரு காவல்துறை அதிகாரி விரும்பினால் அவர், இந்த தேசத்துரோக வழக்கை பயன்படுத்த முடிகிறது. இது ஆங்கிலேயர் காலத்துச் சட்டம் என்பதுதான் பிரச்சனை. மகாத்மா காந்தியை இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திதான் ஆங்கிலேயர்கள் அமைதிப்படுத்தினார்கள்.
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை இந்தச் சட்டத்தைப் பயன்படுத்திதான் முடக்கினார்கள். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கழித்தும் இந்தச் சட்டம் தேவைதானா?
இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதுதான் எங்களது கவலை. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் எந்த பொறுப்புணர்வும் இல்லை’ என்று குறிப்பிட்டனர்.