கொரோனா வைரஸ்- சிறுநீரகம், நுரையிரல், இதயம் பாதிக்கப்படலாம்

 ஆய்வுகளில் புதிய தகவல்கள்!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் இளம் வயதினர் கூட, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது போல் உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

19 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கான சிகிச்சை வழங்கப்படும் போது, 10- இல் 4 பேருக்கு சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

2020ஆம் ஆண்டில் கொரோனா முதல் அலையின் போது, பிரிட்டனில் இருக்கும் 302 மருத்துவமனைகளில் அனைத்து வயது வரம்பைச் சேர்ந்த 73,197 நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

“இது வெறுமனே வயதானவர்கள், பலவீனமானவர்களுக்கான நோய் அல்ல என்பது தான் செய்தி” என்கிறார் பேராசிரியர்   கலும் செம்பில். இவர் தான் இந்த ஆய்வை தலைமை தாங்கி வழிநடத்தியவர்.

“கொரோனா வெறுமனே ஒரு ஃப்ளூ காய்ச்சல் அல்ல. பல இளம் வயதினர் கூட சிக்கலான உடல் உபாதைகளோடு மருத்துவமனைக்கு வருவதை நாங்கள் பார்க்கிறோம். அதில் சிலரை எதிர்காலத்திலும் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை வழங்க வேண்டி இருக்கிறது. இதைத் தான் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன” என்கிறார்.

இந்த ஆய்வு பிரிட்டனின் ஏழு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது. கொரோனாவின் போது சிக்கலான உடல் உபாதைகளைக் கொண்டவர்களின் எண்ணிக்கையை இங்கிலாந்தின் சுகாதாரம், சமூக பாதுகாப்பு, பொது சுகாதாரத்துறை கவனத்தில் எடுத்துக் கொண்டு அவர்களைத் தனியாகக் குறிப்பிட்டது.

பால் கோட்ஃப்ரே

கொரோனாவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில், கிட்டத்தட்ட பாதி பேர், குறைந்தபட்சமாக ஒரு மருத்துவ சிக்கலையாவது எதிர்கொண்டார்கள். பொதுவாக சிறுநீரகப் பிரச்சனைகள், நுரையிரல் சார் பிரச்சனைகள், இருதயம் சார் பிரச்சனைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களில், 51 சதவீதம் பேர் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டார்கள். இவர்களைப் போல 30 – 39 வயதினர்களில் 37 சதவீதம் பேரும், 40 – 49 வயதினர்களில் 44 சதவீதம் பேரும் ஏதாவது ஒரு சிக்கலான உடல் உபாதையால் பாதிக்கப்பட்டார்கள். அதை செவிலியர்களோ அல்லது ஆராய்ச்சியில் பங்கெடுத்த மாணவர்களோ பதிவு செய்திருக்கிறார்கள்.

நோயெதிர்ப்பு மண்டலமே பாதித்திருக்கலாம்

தீவிர கொரோனா வைரஸ் பாதிப்பால் எப்படி உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன என்பது தொடர்பாக மருத்துவர்களிடம் ஒரு தெளிவான பதில் இல்லை. மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலமே, உடலில் ஆரோக்கியமாக இருக்கும் திசுக்களை பாதித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

எஸ்ஸெக்ஸைச் சேர்ந்த பால் கோட்ஃப்ரேவுக்கு மார்ச் 2020-  இல் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு நெஞ்சு வலி என கூறியவரை பரிசோதித்துப் பார்த்த போது அவர் பிராங்கியெக்டாசிஸ் (bronchiectasis) என்கிற நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நுரையிரலில் இருக்கும் பிராங்கி என்கிற பகுதியில் ஏற்படும் தொற்று, அழற்சியால் ஏற்படும் நோய் இது.

“தேசிய சுகாதார சேவை (பிரிட்டன் நாட்டின் பொது சுகாதார அமைப்பு) ஊழியர்கள் என்னை கவனித்துக் கொண்டார்கள். அவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்கிறார் பால்.

இந்த ஆய்வு, மருத்துவ சஞ்சிகையான ‘தி லான்செட்’டில் பிரசுரிக்கப்பட்டது. ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு கூடுதல் சிக்கல் ஏற்படலாம் என அந்த ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.

அதே போல இளம் வயதினர், நல்ல உடல் நலத்தோடு இருப்பவர்களுக்குக் கூட சிக்கலான உடல் நலக்கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

என் வாழ்வின் மோசமான அனுபவம்

கால்செஸ்டர் மருத்துவமனையில், பாலுக்கு நிமோனியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரது இரு நுரையீரலின் அடிப்பகுதிகளும் சீர்குலைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. அவர் சக்கர நாற்காலியில் வீட்டுக்கு அனுப்பப்படுவதற்கு முன், இரு வாரங்களுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றார்.

19 – 29 வயதுக்கு உட்பட்டவர்களில் 13 சதவீதம் பேரும், 30 – 39 வயதினர்களில் 17 சதவீதம் பேரும், கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகும் தங்களை தாங்களே கவனித்துக் கொள்ள முடியவில்லை என கூறியுள்ளனர். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களைச் சார்ந்தே அவர்கள் வாழவேண்டியுள்ளது.

“இது என் வாழ்நாளின் மிக மோசமான அனுபவம். 18 மாதங்களுக்குப் பிறகும், இப்போதும் நான் சிக்கலை எதிர்கொள்கிறேன்” என்கிறார் பால். இப்போதும் அவருக்கு இருக்கும் மருத்துவ சிக்கல்களால் அவருக்கு கடுமையான சோர்வு, மூச்சற்ற நிலை போன்றவை ஏற்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here