நாயைக் கொன்று, அதன் இறைச்சியை சாப்பிட்ட இரு இந்தோனேசியர்களுக்கு அபராதம்

கோத்தா கினபாலு, ஜூலை 29:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உணவுக்காக ஒரு நாயைக் கொன்ற இரண்டு இந்தோனேசிய ஆண்கள், ஒவ்வொருவருக்கும் தலா RM6,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் தங்கியிருந்து வேலை செய்ததாக நம்பப்படும் இந்தோனேசியர்களான பாலி லோலோ (43) மற்றும் தாண்டி யூசுப் (46) ஆகியோர் நீதிபதி எல்ஸி ப்ரிமஸ் முன் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இது விலங்கு நலச் சட்டம் 2015 இன் பிரிவு 18 (1) (அ) இன் கீழ் , தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்ந்த ஒரு குற்றச்சாட்டாகும்.

இந்த பிரிவு அதிகபட்சமாக RM100,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனை விதிக்க சாத்தியமானது.

செப்டம்பர் 29, 2019 அன்று மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை, பெனாம்பாங்கில் உள்ள கம்போங் தம்பாயில் உள்ள ஒரு வீட்டில், பழுப்பு நிற ஆண் வீட்டு நாயை அடித்து கொன்றதாக இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி வாட்ஸ்அப் வழியாக வைரலானதை தொடர்ந்து ,ஒரு நபர் இந்த விவகாரம் குறித்து அக்டோபர் 8, 2019 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

செப்டம்பர் 29 ஆம் தேதி, தாண்டி நாயின் கழுத்தை இறுக்க கட்டிய போது ,பாலி நாய் இறக்கும் வரை அதன் தலையை ஒரு மரத்தடியால் தாக்கினார். மேலும் குறித்த நாய் சபாவைச் சேர்ந்த மார்டின் என்பவருடையது.

பின்னர், பாலி, தாண்டி மற்றும் மார்ட்டின் ஆகியோர் செப்டம்பர் 30, 2019 அன்று பெனாம்பாங்கில் உள்ள கம்போங் பாபாவில் நாயின் இறைச்சியை சாப்பிட்டனர் என்பதும் தெரியவந்தது.

மேலும் மார்ட்டின் என்ற ஆடவருக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தனது நாயை இறைச்சிக்காக கொன்றதன் மூலம் விலங்குகளின் கொடுமை சட்டத்தின்  கீழ் இதே செஷன்ஸ் நீதிமன்றத்தால் 10,000 வெள்ளி அபராதமும் ,நான்கு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாலி மற்றும் தாண்டி இருவரும் விலங்குகளின் கொடுமை குறித்து மலேசிய சட்டத்தைப் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்கள். மேலும் இந்தோனேசியாவில், நாய் இறைச்சி தங்களின் உணவில் ஒன்று என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் அவர்கள் வேலை செய்யும் நோக்கில் மலேசியாவில் இருப்பதாகவும், நாயை கொன்றது அம்மிருகத்தை சித்திரவதை செய்வதற்காக அல்ல, மாறாக இறைச்சியை உட்கொள்வதற்காகவே கொன்றதாகவும் அவர்கள் கூறினர்.

இருப்பினும் தமது தவறை ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்கள்.

“நாங்கள் வருந்துகிறோம், இந்த குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். ஒரு நாயைக் கொல்வது இங்கே ஒரு குற்றம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால், யாராவது ஒரு நாயைக் கொல்லக் கொடுத்தாலும் அதைச் செய்ய நாங்கள் துணிந்திருக்க மாட்டோம்” என்று பாலி கூறினார்.

எவ்வாறாயினும், மலேசியாவில் இத்தகைய நடத்தை மன்னிக்கப்படவில்லை என்றும், RM100,000 அபராதம் விதிக்கப்படுவதாகவும், குற்றத்தின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் நீதிபதி அவ்விருவருக்கும் விளக்கினார்.

மேலும் அவ்விருவருக்கும் விதிக்கப்பட்ட தலா RM6,000 அபராதத்தை குற்றம் சாட்டப்பட்ட இருவரும் செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here