யாரும் இப்படி பார்த்தது இல்லையே’…
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து தென் கொரிய தேசிய புலனாய்வு அமைப்பு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வட கொரியாவின் உள்நாட்டு விவகாரம் என்பது உலக நாடுகளுக்குப் புரியாத புதிராகவே உள்ளது. அதேபோன்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-உன் உடல்நிலை குறித்தும் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் ஜூலை மாத இறுதியில் வட கொரிய இராணுவ தளபதிகள், அதிகாரிகளுடனான சந்திப்பின்போது கிம் ஜாங்-உன் தலையின் பின்புறத்தில் போண்ட்-எய்ட் ஒட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியானது.
இந்த புகைப்படங்கள் வெளியானதிலிருந்து கிம் ஜாங்-உன் உடல்நலம் குறித்த புதிய யூகங்கள் கிளம்பியது. சமீபத்திய மாதங்களில் கிம் 10-20 கிலோ எடை குறைந்ததாகவும், இதற்கு உடல்நல பிரச்சினை தான் காரணம் என ஜூலை மாத தொடக்கத்தில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
எனினும், இந்த யூகங்களை முற்றிலுமாக மறுத்த வட கொரிய அரசு நடத்தும் ஊடகம், நாட்டின் நலனுக்காக உழைத்ததால் நாட்டின் தலைவர் உடல் எடையைக் குறைத்து விட்டார் என்று விளக்கமளித்தது.
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் சில நாட்களுக்கு முன்பு தனது தலையின் பின்புறத்தில் போண்ட்-எய்டுடன் காணப்பட்ட போதிலும் அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏதுமில்லை என்று தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை (என்ஐஎஸ்) தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற அமர்வில், கிம் உடல் நலத்துடன் இருப்பதாகக் கூறிய உளவுத்துறை, சில நாட்களுக்குப் பிறகு போண்ட்-எய்ட் நீக்கப்பட்டது மேலும் எந்த தழும்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் வட கொரியா குறித்து ஒரு துரும்பு செய்தி கூட வெளிவராமல் பார்த்துக் கொள்ளும் கிம் ஜாங்-உன் தனது தலையில் போண்ட்-எய்டுடன் இருக்கும் புகைப்படத்தை எப்படி வெளியிட்டார் என்பது புரியாத புதிராக உள்ளது.