மாநகராட்சி, குடிநீர் வாரியம் பதிலளிக்க வேண்டும்!
கூவம் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை கலந்து மாசுபடுத்துவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் ஆகியவை பதில் அளிக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கூவம் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் நுரைப்படலம் உருவானது. ஆறு மாசுபட்டிருப்பதால் நுரைப்படலம் ஏற்படுவதாக செய்திகள் வெளியாகின. அதை அடிப்படையாகக் கொண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக ஆய்வு செய்ய மாநகராட்சி, கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம், மாவட்ட வருவாய்த் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக் குழு அமைத்து, பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது கூட்டுக்குழு தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
வீட்டுக் கழிவுகள் மற்றும் மாநகரக் கழிவுகளால் கூவம் ஆற்றின் நீர் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதில் அதிக அளவில் கரிம வேதிப் பொருட்கள் கரைந்துள்ளன. முகத்துவாரப் பகுதியில் மணல் மேடுகள் ஏற்பட்டு, மாசடைந்த நீர் தேங்கிவிடுகிறது. பின்னர் இந்த நீர் கடலில் கலக்கும்போது, அலைகளின் தாக்கத்தால் நுரைப்படலம் ஏற்படுகிறது.
எனவே, முகத்துவாரத்தில் மணல் மேடு ஏற்படுவதை தடுக்க, தொடர்ந்து மணல் அள்ளும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டுக் குழுபரிந்துரை செய்துள்ளது. கூவம்ஆற்றில் கழிவுநீர் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்சார்பில், சென்னை குடிநீர் வாரி யத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கழிவுகள் கொட்டப்படுவதால் பள்ளிக் கரணை சதுப்புநிலப் பகுதி பாதிக்கப்படுவதாகவும், கூவம் ஆற்றில் லாரிகள் மூலம் கழிவுநீர் விடுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. எனவே, கூவம் ஆற்றில் கழிவுநீர் விடுவதை தடுக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து சென்னை குடிநீர் வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், மாநகராட்சி, குடிநீர்வாரியம் ஆகியவை சார்பில்கூவம் ஆற்றில் மாசு ஏற்படுத்துவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும்.