டெல்தா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்துங்கள்: வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்

டெல்தா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்தங்கள் என வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் வேற்றுருவாக்கங்கள் அடைந்து இப்போது டெல்தா, டெல்தா பிளஸ் வைரஸ்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. டெல்டா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்பதாலும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களைக்கூட பாதிக்கலாம் என்பதாலும் வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு பூஸ்டர் டோஸாக மூன்றாவது டோஸ் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேஸஸ் பேசுகையில், “உலக நாடுகள் தங்கள் மக்களின் உயிரைப் பாதுகாக்க காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதற்காக தடுப்பூசி மொத்த உற்பத்தியில் ஏற்கெனவே மிக அதிகமான டோஸ்களைப் பயன்படுத்திவிட்ட வளர்ந்த நாடுகள் இன்னும் அதிகமாக இதனைப் பயன்படுத்த நினைப்பது ஏற்புடையது அல்ல.

பெரும்பாலான தடுப்பூசி அதிக வருவாய் ஈட்டும் நாடுகளுக்குச் செல்வதை மாற்றியமைக்க வேண்டும். அதை மடைமாற்றி குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

கடந்த திங்கள் கிழமை ஜெர்மனி அரசு வரும் செப்டம்பர் மாதம் முதல் தொற்றுக்கு வாய்ப்புள்ள மக்களுக்கு பூஸ்டர் டோஸ் போடவிருப்பதாகத் தெரிவித்தது. இரண்டாவது டோஸ் முடிந்து மூன்று மாதங்கள் ஆனவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டது.

அதேபோல் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஸோக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

அமெரிக்காவும் பைஸர் மற்றும் பயோ என் டெக் நிறுவனங்களுடன் 200 மில்லியன் டோஸ்களுக்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை பூஸ்டர் மற்றும் குழந்தைகளுக்கான டோஸ்களுக்காகப் பயன்படுத்தவுள்ளது.

இந்நிலையில் தான், தடுப்பூசி வழங்கலில் நிலவும் ஏற்றத்தாழ்வை சீராக்கும் வகையில், டெல்தா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்தங்கள் என வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here