ஆப்கானில் இருந்து கத்தார் சென்ற அமெரிக்கா விமானத்தின் சக்கர பகுதிகளில் மனித உடல் பாகங்கள்

கத்தார்: தாலிபான்கள் பிடியில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து கத்தார் சென்ற அமெரிக்கா விமானப் படையின் விமானத்தின் சக்கரங்களில் மனித உடல்பாகங்கள் சிதறி ஒட்டியிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் வசமாகிவிட்டது. தாலிபான்கள் 1990களில் மிக கொடூரமான ஆட்சியை நடத்தினர். இதனால் மீண்டும் அத்தகைய ஆட்சியில் அகப்படுவோம் என்பது ஆப்கானியர்களின் அச்சம்.

தப்பி ஓட முயற்சி

இதனையடுத்து காபூல் எப்போது தாலிபான்கள் வசமானதோ அந்த நிமிடம் முதல் நாட்டைவிட்டே தப்பி ஓட முயற்சிக்கின்றனர் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள். ஒருகட்டத்தில் காபூல் விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் தடை செய்யப்பட்டன.

அமெரிக்க விமானம்

பின்னர் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விமானப் படை விமானங்கள் காபூல் விமான நிலையத்தில் தரை இறங்கி தங்களது நாட்டு மக்களை பாதுகாப்பாக மீட்டுச் சென்றன. அப்படி அமெரிக்காவின் விமானப் படைக்கு சொந்தமான சி17 குளோபல் மாஸ்டர் விமானம் ஒன்று காபூல் விமான நிலையத்தில் தரை இறங்கியது. அமெரிக்க தூதரக ஊழியர்களை பாதுகாப்பாக மீட்பதற்காக தரை இறங்கியது அந்த விமானம்.

வானில் இருந்து விழுந்து மரணம்

ஆனால் எப்படியாவது ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி ஓடிவிட வேண்டும் என நினைத்து காத்திருந்தவர்கள் பேருந்துகள், ரயில்களில் ஏறுவதைப் போல விமானத்தை பிடித்து தொங்கியபடி ஏற முயன்ற காட்சிகள் ஆப்கான் பேரவலத்தை வெளிப்படுத்தின. பின்னர் 600க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் போர் விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்ட படங்களும் வெளியாகின.

அப்படி புறப்பட்ட அமெரிக்க விமானத்தின் சக்கரங்களுடன் தங்களை கட்டிப் போட்டுக் கொண்டு அதாவது விமானத்தில் தொங்கியபடியே பறந்த சிலர் விமானம் மேலே கிளம்பிய போது தூக்கி வீசப்பட்டு காபூல் விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையிலேயே சிதறி விழுந்து மாண்டு போயினர். உலகம் முழுவதும் இத்தகைய வீடியோ காட்சிகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.

விமான சக்கரங்கள் மனித உடல் பாகங்கள்

இந்நிலையில்தான் காபூலில் இருந்து புறப்பட்டு கத்தாரில் தரை இறங்கிய அமெரிக்க விமான சக்கரத்தில் மனித உடல் பாகங்கள் சிதறி ஒட்டிக் கிடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப் பெரிய மனிதப் பேரவலத்தின் சாட்சிகளாக ஆப்கான் ஆட்சி மாற்றம் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது நெஞ்சை நடுநடுங்க வைக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here