சேவல் சண்டையின் போது தொடையில் காயமடைந்த ஆடவர்; சிகிச்சை பலனின்றி பரிதாப மரணம்

பிந்துலு: கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 29) பத்து 21 ஜாலான் பிந்துலு-மிரியில் உள்ள செம்பனைத் தோட்டம் அருகே நடந்த சேவல் சண்டையில் சேவலில் இணைக்கப்பட்ட கூர்மையான ஆயுதம் தொடையில் குத்தியதால் ஆடவர் ஒருவர் இறந்தார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நடந்த சம்பவத்தின் போது 42 வயதான அவர் சண்டையிடும் சேவலின் காலில் கூர்மையான ஆயுதத்தை கட்டியிருந்ததாக மாவட்ட போலீஸ் தலைமை கண்காணிப்பாளர் சுல்கிப்லி சுஹைலி கூறினார்.

அந்தக் கூர்மையான ஆயுதத்தை கட்டியபோது, ​​சேவல் அவரை நோக்கிச் சென்றது, அப்பொழுது கூர்மையான அந்த ஆயுதம் அவரது தொடையைத் துளைத்தது, இதனால் அதிக இரத்தம் வழிந்தது என்றார்.

“பாதிக்கப்பட்டவர் உடனே பிந்துலு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் அதிக இரத்தம் இழந்ததன் காரணமாக இரவு 7.29 மணிக்கு இறந்தார்.

“இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் கூறினார்.

சேவல் சண்டை நடவடிக்கை தொடர்பான விசாரணைகளுக்காக 31 முதல் 53 வயதுடைய 6 ஆண்களை போலீசார் நேற்று நண்பகல் 1.30 மணிக்கு கைது செய்தனர்.

அவர்கள் இன்று பிந்துலு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டனர் என்றும் கூறினார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 269, விலங்குகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 3 (1) மற்றும் தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (பாதிக்கப்பட்ட உள்ளூர் பகுதிகளில் உள்ள நடவடிக்கைகள்) விதிமுறைகள் 17 (2) ன் கீழ் இவ்வழக்கு விசாரணை செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவருக்கும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது 1,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் சுல்கிப்லி கூறினார்.

மேலும் “தேசிய மீட்புத் திட்டத்தின் போது நிலையான இயக்க நடைமுறைகளை மீறியதற்காக அவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here