முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி உதவி ஊழியர்கள் மட்டுமே பணிக்கு திரும்புவதற்கு அனுமதி

கோலாலம்பூர்: பள்ளிகளில் வேலை செய்யும் துணை ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டால் மட்டுமே அக்டோபர் 3 ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது பணிக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 3 தேதியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையில், பாதுகாவலர்கள், துப்புரவுப்பணியாளர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துபவர்கள் வளாகத்திற்குள் நுழைய வேண்டுமாயின் அவர்கள் தடுப்பூசியின் முழு அளவையும் பெற்றிருக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது.

ஃபைசர், அஸ்ட்றாஜெனெக்கா அல்லது சினோவாக் போன்ற தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொண்ட 14 வது நாளுக்குப் பின்பே அவர்கள் பள்ளிகளுக்குள் நுழைய முடியும் என்றும் , அதேசமயம் ஜான்சன் & ஜான்சன் மற்றும் கன்சினோ தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் தடுப்பூசி போட்ட 28 நாட்களுக்குப் பின்பே வேலைக்குச் செல்ல முடியும் என்றும் அது தெரிவித்தது.

“எனவே, சேவை ஒப்பந்ததாரர்களாக, உங்கள் மேற்பார்வையில் உள்ள தொழிலாளர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று அமைச்சக துணை பொதுச் செயலாளர் (திட்டமிடல் மற்றும் மேம்பாடு) நூர் அஸ்மான் அப்துல் ரஹ்மான் கூறினார்.

கடந்த வாரம், கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் இது பற்றிக் கூறியபோது, கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்கள் நேரடியான கற்பித்தல் முறையில் பள்ளிகளின் வகுப்புக்களுக்கு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here