மனிதன் தன் தேவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பயன்படுத்திய முதல் மொழி சைகை மொழி. சைகை மொழி என்பது பலவித கை வடிவங்கள், கை அசைவுகள் மற்றும் முக பாவனைகள் மூலம் பேசப்படுகிறது. உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன. இதை போன்றே, சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என பல உள்ளன.
வரலாறு :
சைகை மொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு துணை புரியும் என்று வலியுறுத்தப்படுகிறது. 1951ம் ஆண்டில், உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நிலையில் முதன்முதலில் 2018ல் சர்வதேச சைகை மொழிகள் தினம் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்பட்டது. 2021ம் ஆண்டிற்கான சர்வதேச சைகை மொழி தினத்தின் கருப்பொருள் “நாங்கள் மனித உரிமைகளுக்காக கையெழுத்திடுகிறோம்” என்பதாகும்.
உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் கூற்றுப்படி உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காது கேளாதவர்கள் மற்றும் அவர்களில் 80%க்கும் அதிகமானோர் வளரும் நாடுகளில் தங்கியுள்ளனர். இவர்கள் 300க்கும் மேற்பட்ட வெவ்வேறு சைகை மொழிகளைப் பயன்படுத்துகின்றனர். சைகை மொழிகள் மக்கள் பேசும் மொழிகளிலிருந்து கட்டமைப்பு ரீதியாக வேறுபடுகின்றன. எனினும் உலகளாவிய சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளின் போது மக்கள் பயன்படுத்தும் ஒரு சர்வதேச சைகை மொழியும் உள்ளது. இந்த சைகை மொழி உலகெங்கிலும் உள்ள சிறப்பு திறன்களைக் கொண்ட மக்களை ஒன்றாக இணைக்க உதவுவதால் இது மிகவும் முக்கியமானது.