செயலி (App) ஆர்டரின் மூலம் குழந்தை பெற்றாரா? ; இணையத்தை கலக்கும் இங்கிலாந்து பெண்

இங்கிலாந்தில் பெண்ணொருவர் செயலி (App) ஆர்டரின் மூலம் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள வடக்கு யார் சீர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டேப்னி டெய்லர். 33 வயதான இவர் தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ்ந்த போது பிராங்கிளின் என்ற மகன் பிறந்தார். இந்நிலையில் பிராங்கிளினுக்கு 4 வயதாகும் நிலையில் டெய்லருக்கு அவருடன் வாழ்க்கை துணைவராக வாழ்ந்து வந்த நண்பருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் உறவில் விரிசல் ஏற்பட்டது.

தனியாக வாழ்ந்து வரும் சூழலில் இரண்டாவதாக ஒரு குழந்தை பெற்று கொள்ள விரும்பினார் டெய்லர். ஆனால் அவர் இன்னொரு நபரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தாலும், அதிகமாக பணம் செலவாகும் நிலை இருந்தது. இதனையடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள மாற்று வழி ஏதேனும் உள்ளதா ? என்று டெய்லர் இணையத்தில் தேடிய போது, விந்தணுக்கள் பெற செயலி ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார்.

Just A Baby எனும் அந்த செயலி மூலம் டெய்லருக்கு விந்தணு கொடையாளர் கிடைத்தார். சில வாரங்களுக்கு பிறகு டெய்லரின் வீட்டுக்கு வந்து விந்தணுக்களை ஒப்படைத்தார் அந்த கொடையாளர். இந்த சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கருவுறுதல் கருவியை ஆன்லைனில் ஆர்டர் செய்த டெய்லர், யூ-டியூப் மூலம் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதை தெரிந்துகொண்டு, கொடையாக பெற்றுக் கொண்ட விந்தணுக்களை தன்னுடைய உடலில் சேர்த்துக் கொண்டார். அதன் பின்னர் சில வாரங்களுக்குப் பிறகு கர்ப்பம் தரித்த டெய்லருக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தை தற்போது ஈடன் எனும் பெயரில் வளர்ந்து வருகிறது. தன்னுடைய மகன் பிராங்கிளின் தனியாக வளர்வதை விரும்பாததால், இந்த முடிவை எடுத்ததாக இங்கிலாந்து ஊடகங்களிடம் டெய்லர் கூறியுள்ளார்.

இந்நிலையில்  குழந்தைக்காக இன்னொரு ஆண் துணையை தேடாமல், புதுமையான முயற்சி மேற்கொண்டதற்காக டெய்லரின் குடும்பத்தினர் அவரை பாராட்டி உள்ளனர். இதேவேளை குழந்தை பிறந்து ஏறத்தாழ ஓராண்டிற்குப் பிறகு இந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here