65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு 3ஆவது தவணை தடுப்பூசி போட அரசு திட்டம்

அமெரிக்காவில் நோய்ப் பாதிப்புக்கு அதிக வாய்ப்பு உள்ள 16 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை மூன்றாவது தவணையாக போட பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் 65 வயதுக்கும் மேற்பட்ட மக்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை மூன்றாவது தவணையாக போட அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல, கொரோனா தாக்கும் வாய்ப்பு அதிகமுள்ள 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி, உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசியின் திறன் சில மாதங்களில் குறையும் என்பதால், இஸ்ரேலில் மூன்றாவது தவணை தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் 16 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை மூன்றாவது தவணையாக போட பைடன் நிர்வாகம் திட்டமிட்டது.

இதுகுறித்து ஆலோசனை நடத்திய உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் வல்லுநர் குழு, 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் நோய்ப் பாதிப்புக்கு அதிக வாய்ப்பு உள்ள 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடலாம் என பரிந்துரை செய்தது.இதனைத் தொடர்ந்து, 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் நோய் தாக்கும் அபாயம் உள்ளவர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி போட உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது உள்ள தரவுகளின் அடிப்படையிலேயே இந்த முடிவை மேற்கொண்டதாக அந்த அமைப்பின் தலைவர் ஜேனட் வுட்காக் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நோய் தடுப்பு அமைப்பு, மேலும் ஒரு வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவினர், தீவிர நோய் பாதிப்பு அபாயம் உள்ளவர்களின் பட்டியலை தயார் செய்ய உள்ளனர்.

இந்தக் குழுவினர், உடல் பருமனானவர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அறிவித்தால், அதில் 42 சதவீத மக்கள் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள், பல்பொருள் அங்காடி பணியாளர்கள், தற்காலிக முகாம்களில் தங்கியிருப்போர், சிறைவாசிகள் உள்ளிட்டோருக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here