கோலாலம்பூர்: பண்டார் பாரு அம்பாங்கில் உள்ள ஒரு அனாதரவான குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில், தனது பராமரிப்பில் இருந்த ஆட்டிஸ்டிக் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிங்கப்பூர் பெண் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் முகமட் ஃபாரூக் ஈஷக் கூறினார்.
குழந்தை சட்டம் 2001 பிரிவு 31 (1) (a) மற்றும் குடிவரவு சட்டம் 1959/63 ன் பிரிவு 15 (1) (c) ஆகியவற்றின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
“விசாரணை முடிந்துவிட்டது, விசாரணை அறிக்கை இன்று அட்டர்னி ஜெனரலின் அறைக்கு அனுப்பப்பட்டது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குழந்தையை புறக்கணித்ததற்காக குழந்தை சட்டம் 2001 பிரிவு 31 (1) (a) ஐ மீறியதற்கான தண்டனை 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று பாரூக் குறிப்பிட்டார்.
மேலும் குடிவரவுச் சட்டத்தின் பிரிவு 15 (1) (c) காலாவதியான சமூகப் பாஸுடன் அதிகமாக தங்கியிருப்பதற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10,000 வெள்ளிக்கு மிகாமல் அபராதம் அல்லது ஐந்து வருடங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் மற்றும் இரண்டிற்கும் அதிகமான 6 பிரம்படிகள் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
அக்டோபர் 3 ஆம் தேதி நண்பகல் 1:50 மணியளவில் அம்பாங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகத்தில் உள்ள பாலியல் புலனாய்வு அலுவலக வளாகத்தில் அந்தப் பெண் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பரூக் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் தந்தையான 36 வயதான உள்ளூர் ஆடவர், தனது 6 வயது மகனின் தோள்பட்டை, இடது தோள் மற்றும் இரு கண்களிலும் காயங்கள் இருந்ததையடுத்து, போலீஸில் புகார் செய்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
“அங்கு பணிபுரியும் ஆசிரியர்களில் ஒருவர், பாதிக்கப்பட்டவரின் தந்தைக்கு அவரது மகன் சாப்பிட விரும்பாததால் தலையை மேஜையில் அடித்ததாக கூறினார். அவர் கூறியதில் சந்தேகப்பட்டு கண்காணிப்பு கேமராவில் (CCTV) காட்சிகளை சரிபார்க்க விரும்பினார்” என்று கூறினார்.