என்ன ஆச்சரியம்.. உலகம் முழுக்க பேச்சு.. ஒரே நேர்கோட்டில் 10 ஆயிரம் கி.மீ பறந்து இடம் பெயர்ந்த கழுகு

லண்டன்: கொரோனா காலத்தில் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் செய்வது கடினமாகி வருகிறது. உலகெங்கிலும் உள்ள அரசுகள் வெளிநாட்டினரின் பயணத்தை தடுக்க பல விதிகளை வகுத்துள்ளன.

கொரோனா பரிசோதனை இல்லாமல் யாரும் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.ஆனால், அரசுகளால் உருவாக்கப்பட்ட விதிமுறைகள், குறிப்பிட்ட இந்த falcon கழுகுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏன் இந்த கழுகு இப்போது உலகமெங்கும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் அதிகம் விவாதிக்கப்படுகிறது.

கழுகு நடவடிக்கை

இதோ விஷயம் இதுதான். உலகின் அதிவேக பறக்கும் பறவை என்று அழைக்கப்படுவது falcon கழுகு, அதாவது வல்லூறு. இப்படித்தான் நாம் பார்க்க உள்ள இந்த ஹீரோ கழுகு தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கான பயணத்தை வெறும் 42 நாட்களில் முடித்துள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா.

இந்த கழுகின் நடவடிக்கையை கண்காணிக்க அதன் உடலில் டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்டிருந்தது. ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டது. அப்போது பறவையின் செயல்பாடுகள் துல்லியமாக தெரியவந்தது.

10 ஆயிரம் கி.மீ

தென்னாப்பிரிக்காவிலிருந்து பின்லாந்து வரையிலான தூரம் 10 ஆயிரம் கிமீ ஆகும். இந்த கழுகு, ஒரு நாளைக்கு சராசரியாக 230 கிமீ தூரத்தை கடந்துள்ளது. இடம் பெயரும் இந்த கழுகை கண்காணிக்க சமீபத்தில் ஒரு டிரான்ஸ்மிட்டர் நிறுவப்பட்டது. இதனால் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்பட்டது. இன்த கழுகு 10 ஆயிரம் கிமீ தூரத்தை கிட்டத்தட்ட அதிக இடங்களில் நிற்காமல் கடந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

தட்ப வெப்பம்

கழுகு ஐரோப்பாவின் மேல் தொடர்ந்து பறந்தது. அதே நேரம், ஆப்பிரிக்கா கண்டத்தில், கழுகு சிறிது தூரம் பறந்து அவ்வப்போது கீழே வந்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டது. ஐரோப்பா வானிலை காரணமாக, கழுகு கீழே வர விரும்பவில்லை என்று தெரிகிறது.

பறவை பாதை

ஒரு உயிரினத்தின் அதிகபட்ச செயல்திறனில் எவ்வளவு மாறுபட்ட வானிலை மற்றும் வெப்பநிலை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இது காட்டுகிறது. இந்த பறவை சென்ற பாதை வரைபடமாக வெளியாகி இந்த பதிவு தற்போது வைரலாகி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர். மேலும் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

கடலை தவிர்த்தது

இந்த பயணத்தின் போது, ​​கழுகு, தனது அறிவு திறமையை காட்டியுள்ளது. ஏனெனில் கடலில் பயணம் செய்வதைத் தவிர்த்துள்ளது. கடல் குறுக்கே வரும் இடங்களில் எல்லாம் சட்டென வேறு பக்கம் திரும்பி நாடுகளின் நிலப்பரப்பு மேலேயே அது பறந்துள்ளது. மேலும் நேர் கோட்டில் அது ஐரோப்பாவிற்கு பறந்துள்ளது.

அதி வேக பறவைகள்

falcon கழுகுகள் மிக வேகமாக பறக்க கூடியவை. வழக்கமான கழுகுகளை விட அளவில் சற்று சிறியவை falcon கழுகுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு இரையை குறி வைத்து விட்டால், அதை நோக்கி சீறி பாயும்போது அவற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 300 கிமீ வரை இருக்கும். எனவே கண்ணிமைக்கும் நேரத்தில், இந்த கழுகு தனது இரையை வேட்டையாடிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான், falcon கழுகு, உலகின் மிக வேகமாக பறக்கும் உயிரினமாகவும், உலகின் வேகமான உயிரினமாகவும் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here