எங்களை அங்கீகரிக்காவிட்டால்… உலக நாடுகளுக்கு தாலிபான்கள் விடுத்த எச்சரிக்கை

இதுவரை எந்த நாடும் தாலிபான் தலைமையிலான ஆப்கன் அரசை அங்கீகரிக்காமல் இருந்து வருகின்றன. எங்களை மட்டும் அங்கீகரிக்காவிட்டால் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்திற்குமே அது பிரச்னை தான் என தாலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

2001ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்த தாலிபான்கள், அமெரிக்க படையினரின் வெளியேற்றத்தை தொடர்ந்து வெகு விரைவாகவே பல்வேறு மாகாணங்களை கைப்பற்றிய நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று தலைநகர் காபுலையும் கைப்பற்றி அஷ்ரப் கனி தலைமையிலான அரசை தூக்கி எறிந்தனர். மேலும் அஷ்ரப் கனி நாட்டை விட்டே வெளியேறினார்.

ஆப்கானிஸ்தானில் தற்போது புதிய ஆட்சியை நிறுவியுள்ள தாலிபான்கள், ஹசன் அகுந்த் என்பவரை பிரதமராக அறிவித்து புதிய அமைச்சரவையை உருவாக்கியுள்ளனர். ஆனால் தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றி 75 நாட்களை கடந்து விட்ட போதிலும் கூட சீனா உள்ளிட்ட உலக நாடுகள் இதுவரையில் தாலிபான்கள் தலைமையிலான புதிய ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்காமல் இருந்து வருகின்றன.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்னைகளை சந்தித்து வரும் ஆப்கானிஸ்தான் திணறி வருகிறது. மேலும் பல்வேறு நாடுகளில் ஆப்கனுக்கு சொந்தமான பில்லியன் கணக்கிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இது குறித்து பேசியிருக்கும் தாலிபான்கள் அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருக்கின்றனர்.

தாலிபான் செய்தித்தொடர்பாளரான ஸபிஹுல்லா முஜாஹித் செய்தியாளர்களிடையே பேசும்போது, “அமெரிக்காவுக்கு எங்களுடைய செய்தி என்னவென்றால், எங்களை அங்கீகரிக்காமல் தொடந்து காலம் தாழ்த்தினால் அது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்த பகுதிக்கும் பிரச்னை தான். உலக நாடுகளுக்கும் இது பிரச்னை தான்.

அமெரிக்காவுக்கும் எங்களுக்கும் அதிகாரப்பூர்வ உறவு இல்லாதது தான் கடந்த முறை அவர்களுடன் போர் நடைபெற்றதற்கு காரணமாக இருந்தது.. போருக்கு காரணமாக இருந்த அந்த பிரச்னைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது அரசியல் ரீதியில் தீர்வு கண்டிருக்கலாம்” என்றார்.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற தொடர் பயங்கரவாத சம்பவங்களுக்கு காரணமாக இருந்த அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவு தந்ததற்காக தான் தாலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையை 2001ம் ஆண்டு அமெரிக்கா தொடங்கியது. இது குறித்து தான் முஜாகிதின் பேசியிருந்தார். ஸபிஹுல்லா முஜாஹித் தொடர்ந்து பேசும்போது, சர்வதேச அங்கீகாரம் என்பது ஆப்கன் மக்களின் உரிமை எனவும் கூறினார்.

சீனா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் பிரதிநிதிகள் தாலிபான் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பேசியிருக்கும் நிலையில் இதுவரை எந்த நாடும் தாலிபான் தலைமையிலான ஆப்கன் அரசை அங்கீகரிக்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.