ரயில் பயணிகளை அலறவிட்ட ஜோக்கர்… 17 பேருக்கு கத்திக்குத்து

ரயில் பயணிகளை கத்தியால் குத்தி காயப்படுத்திய நபர் கேஷூவலாக ரயில் இருக்கையில் கால்மேல்கால் போட்டு அமர்ந்து சிகரெட் பிடித்துக்கொண்டு போலீஸார் வருகைக்காக காத்திருந்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் உள்ள கியா ரயில்நிலையத்தில் இருந்து ஷின்ஜூகு வரை ரயில்கள் இயக்கப்படுகிறது. பரபரப்பான இந்த வழித்தடத்தில் எப்போதும் ஏராளமான பயணிகள் ரயிலில் பயணிப்பது வழக்கம். இந்த ரயிலில் பேட்மேன் திரைப்படத்தில் வரும் வில்லன் கதாப்பாத்திரமான ஜோக்கர் வேடமணிந்த நபர் ஒருவர் பயணித்துள்ளார்.

ஜோக்கரின் அடையாளமான பச்சை நிற சட்டையும் இளஞ்சிவப்பு நிற கோட்டும் பயமுறுத்தும் மேக்கப் உடன் வந்துள்ளார்.  ஜப்பான் முழுவதும் நேற்று ஹாலோவீன் கொண்டாட்டம் இருந்ததால் அனைவரும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ரயில் சென்றுக்கொண்டிருந்த போது அந்த நபர் ஒரு பெரிய கத்தியை கையில் எடுத்ததும் பயணிகள் கொஞ்சம் அச்சமுற்றனர். அந்த நபர் திடீரென பயணிகளை தாக்கத் தொடங்கினார். பயணிகளை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து ரயில் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடத்தொடங்கினர். அந்த நபர் தாக்குதலை நிறுத்தவில்லை.

ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். சிலர் ஜன்னல்கள் வழியாக ஏறிக்குதித்தனர். மர்மநபர் நடத்திய தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர். சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

60 வயதான நபர் ஒருவர் கத்திக்குத்தில் பயங்கர காயமடைந்துள்ளார் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் ரயில் நிலையமே பரபரப்பானது.

இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸார், தீயணைப்பு வீரர்கள் ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். ஜோக்கரின் மேனரிஸத்துடன் ரத்தம் படித்த கத்தியுடன் சாதாரணமாக நடந்து வந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த சம்பவம் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அந்த நபர் வெளியே வராமல் இருக்க ரயில் கதவுகளை மூடினர். அந்த நபரோ கேஷூவலாக ரயில் இருக்கையில் கால்மேல்கால் போட்டு அமர்ந்து சிகரெட் பிடித்துக்கொண்டு போலீஸார் வருகைக்காக காத்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here