ஜோகூரில் உள்ள சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு உதவ 332.6 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி

ஜோகூர் மாநிலத்தில் மொத்தம் 21,934 சிறு, நடுத்தர நிறுவனங்கள் (SMES) 332.6 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி பலன்களைப் பெற்றுள்ளன.

கோவிட்-19 தொற்று நோய் பாதிப்பிற்குப் பிறகு செயலில் உள்ள வணிகத்திற்குத் திரும்ப இத்தொகை அவர்களுக்கு உதவியுள்ளன.

ஜோகூர் மாநில தொழில்முனைவோர் மேம்பாட்டு மன்றத்தின் (MPUNJ) மூலம் கடந்த ஜூலை வரை அதன் கீழ் உள்ள ஏஜென்சிகள் மூலம் இந்நிதியுதவி அளிக்கப்பட்டதாக மாநில முதலீடு, தொழில்முனைவோர் மேம்பாடு, மனித வளக்குழுவின் தலைவர் டத்தோ முகமட் இஸ்ஹார் அமாட் தெரிவித்தார்.

இந்நிதி உதவி புதிய விதிமுறையின் பொருளாதாரச் சவால்களில் போட்டித்தன்மையை உருவாக்க அவர்களுக்கு வழங்கும் ஓர் உதவியாகும்.

கடந்த ஆண்டு மார்ச் முதல் தற்போதுவரை செயல்படுத்தப்பட்ட கருத்தரங்குகள், பயிற்சிகள் போன்ற தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்கள், நிதித் திட்டங்கள், வணிக உதவி மானியங்கள், வணிகப் போட்டிகள் போன்ற பல்வேறு வகையான ஊக்கத்தொகைகளை அரசாங்கம் வழங்கியுள்ளது.

செயல்படுத்தப்பட்ட அனைத்து முயற்சிகளிலும் கிட்டத்தட்ட 60,000 ஜோகூர் மாநில தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர் என்று லார்க்கின் சட்டமன்ற உறுப்பினருமான அவர், நேற்று கோத்தா இஸ்கண்டாரில் உள்ள ஜோகூர் மாநில சட்டமன்றக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.

மோசமாகப் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர்களுக்கு அரசு உதவி செய்யும் முறை குறித்து நஜிப் லெப்பின் (புக்கிட் பாசிர்-பிஎன்) வாய்மொழி கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இந்த ஆண்டிற்கான கோவிட்-19க்குப் பிந்தைய தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மாநில அரசு, ஜோகூர் தொழில்முனைவோர் கழகம் (PUJB) மூலம் 7 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் அவர் மேலும் விவரித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) காலத்தில் செயல்படுத்தப்பட்ட முன்முயற்சிகள் அல்லது திட்டங்கள் மூலம் மாநிலத்தில் உள்ள தொழில்முனைவோரின் போட்டித்திறன், வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதே இதன் நோக்கமாகும். இயந்திரங்கள், உபகரணங்களை வாங்குவதற்கான மானியங்கள், வளாகங்களை மேம்படுத்துதல், பண உதவி, திறன் பயிற்சித் திட்டங்கள் என கிட்டத்தட்ட 40,000 தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here