கூச்சிங், டிசம்பர் 16 :
ஜாலான் சிம்பாங் 3 -பத்து லிந்தாங் சாலைச் சந்திப்பில், நேற்று போலீஸ் ரோந்து வாகனம் மீது தனது காரை மோத முயன்றதாகக் கூறப்படும் ஒரு வாகன ஓட்டுநர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இரவு 7.40 மணியளவில் நடந்த சம்பவத்தில், புரோட்டான் சாகாவை ஓட்டிச் சென்ற நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டதாகவும், போலீசார் நிறுத்துமாறு அறிவுறுத்தியபோது, அவர் தனது காரை அதிவேகமாக போலீசாரை நோக்கி ஓட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அடையாளம் தெரியாத சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்ட போது, போக்குவரத்து விளக்கு சந்தியில் பல கார்களை மோதியுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேக நபர் அவரை கைது செய்ய முயன்ற பல போக்குவரத்து போலீசாரை கீழே தள்ள முயன்ற போது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சரவாக் சிஐடி தலைவர் எஸ்ஏசி லூகாஸ் அகேட்டை தொடர்பு கொண்டபோது, சம்பவத்தை உறுதி செய்தார்.
-பெர்னாமா