செகாமாட், ஜனவரி 2 :
இன்று காலை 10 மணி நிலவரப்படி, ஜோகூர் மாநிலத்தில் உள்ள இரண்டு ஆறுகள், செகாமாட் மாவட்டத்தில் ஒன்றும் மூவாரில் மற்றொரு ஆறும் அபாய அளவைக் கடந்துள்ளன, இன்னுமொரு ஆறு அதன் எச்சரிக்கை அளவையும் கடந்துள்ளது என்று ஜோகூர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) தெரிவித்துள்ளது.
ஆற்றின் அளவீட்டு அட்டவணையின்படி, செகாமாட் நகரில் உள்ள சுங்கை செகாமாட், 9.34 மீட்டர் அளவைப் பதிவு செய்துள்ளது, இது அதன் அபாய அளவான 9.14 மீட்டரைத் தாண்டியது.
இங்குள்ள சுங்கை பூலோ காசாப், 9.14 மீ அபாய அளவோடு ஒப்பிடும் போது, 8.97 மீ அளவாகப் பதிவாகியுள்ளது, தொடர்ச்சியான கனமழையின் காரணமாக விரைவான மேல்நோக்கிய போக்குடன், அபாய அளவை நெருங்கியுள்ளது.
கம்போங் அவாட் மூவாரில் உள்ள சுங்கை மூவார் அபாய அளவான 19.95 மீட்டருடன் ஒப்பிடும் போது 21.79 மீட்டர் அளவைப் பதிவு செய்து, அதன் அபாய அளவை தாண்டியது.
இதற்கிடையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, மாநிலத்தில் 28 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) 425 குடும்பங்களைச் சேர்ந்த 1,646 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 4 மணி நிலவரப்படி, 20 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 1,167 பேர் தங்கியிருந்தனர். இதனுடன் ஒப்பிடுகையில் வெள்ளத்தினால் வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
ஜோகூர் மாநிலத்திலேயே செகாமட்தான் அதிக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்று ஜோகூர் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஆர் வித்யானந்தன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.