வெள்ளத்திற்குப் பிந்தைய உதவிக்காக சபாவிற்கு RM108.51 மில்லியன் ஒதுக்கீடு – பிரதமர்

கோத்தா மருடு, ஜனவரி 8 :

வெள்ளத்திற்குப் பிந்தைய உதவிக்காக மொத்தம் RM108.51 மில்லியன் நிதி மத்திய அரசால் சபாவுக்கு அனுப்பப்படும் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்கள் உட்பட பொது உள்கட்டமைப்புகளை சரிசெய்ய RM90.86 மில்லியன் ஒதுக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

“பொதுப்பணித் துறை மற்றும் பிற தொடர்புடைய தரப்பினரால் சரிபார்க்கப்படும் (சேதமடைந்த பொது உள்கட்டமைப்புகளின்) பட்டியலை நாங்கள் இப்போது பெற்றுள்ளோம். வெள்ள பரிவு உதவி நிதி (BWI) உதவி மட்டுமன்றி உள்கட்டமைப்பு போன்ற அனைத்து (வெள்ளத்திற்குப் பிந்தைய) விஷயங்களும் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன்.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர், மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள சேதமடைந்த உள்கட்டமைப்புகளால் அவர்களை மேலும் கஷ்டப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அத்தோடு இது பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும், எனவே முடிந்தால், நாம் விரைவாக அவற்றை பழுதுபார்க்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இன்று கோத்தா மருடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 206 பேருக்கு BWI உதவி மற்றும் உணவு கூடைகளை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் சபா முதல்வர் டத்தோ ஹாஜி நூர் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் (சபா மற்றும் சரவாக் விவகாரங்கள்) மற்றும் கோத்தா மருடு எம்பி டத்தோஸ்ரீ டாக்டர் மாக்சிமஸ் ஓங்கிலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் BWI உதவியில் 90 சதவீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை விரைவில் வழங்கி முடிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here