காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 248 கிலோ கஞ்சா சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டது

கோத்தா பாரு, ஜனவரி 17 :

கிளந்தான் மாநில ரோயல் மலேசியன் சுங்கத் துறையினர் (JKDM) RM620,000 மதிப்புடைய 248 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட கஞ்சாவைக் கொண்ட 10 மூட்டைகளைக் கைப்பற்றியுள்ளது.

நேற்று காலை 11.30 மணியளவில் இங்குள்ள ஜாலான் செம்பகா பாஞ்சி, பெங்காலான் செபாவில் புரோட்டான் எக்ஸோரா வகை காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, பதப்படுத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கிளந்தான் ஜேகேடிஎம் இயக்குநர் முகமட் நசீர் டெராமன் தெரிவித்தார்.

“கோத்தா பாரு அமலாக்கப் பிரிவு செயல்பாட்டுக் குழுவின் தகவல் மற்றும் கண்காணிப்பின் அடிப்படையில், இந்த சோதனை நடத்தப்பட்டது.

“சோதனையின் விளைவாக, ஒரு பழுதுபார்க்கும் கடையில் (கேரேஜில்) நிறுத்தப்பட்டிருந்த புரோட்டான் எக்ஸோரா காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 248 கிலோ பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை சுங்கத்துறை கைப்பற்றியது. அதன் மதிப்பீடு சுமார் RM620,000 ” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த பதப்படுத்தப்பட்ட கஞ்சா தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், நாட்டின் எல்லை வழியாக பொருட்களை கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்பட்ட செயல் முறை என்றும் முகமட் நசீர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, கடத்தல்காரர்களின் சேவையைப் பயன்படுத்தி, பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை ஆற்றின் வழியாக கட்டம் கட்டமாக நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

“காப்பாற்றப்பட்ட இந்த பதப்படுத்தப்பட்ட கஞ்சா சந்தையில் விநியோகிக்கப்படுவதற்கு முன்பு, அவற்றினை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எங்காவது சேகரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்படும் என்றார்.

“அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39 (பி) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரிவு 39 பி (2) இன் கீழ் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.

இதுபோன்ற, குறிப்பாக போதைப்பொருள், சிகரெட், மதுபானம், பட்டாசுகள், வாகனங்கள் கடத்தல் குற்றங்களைக் கட்டுப்படுத்த ஜே.கே.டி.எம்-க்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

குற்றச்செயல்கள் அல்லது எந்தவொரு கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் உள்ள பொதுமக்கள், அனைத்து மாநிலங்களிலும் உள்ள சுங்கக் கட்டணமில்லா தொலைபேசி எண் 1-800-8855 அல்லது அருகிலுள்ள சுங்க அலுவலகத்தை அழைப்பதன் மூலம் தமக்கு ஒத்துழைக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

“ஒவ்வொரு தகவல் தருபவரின் அடையாளமும் ரகசியமாக வைக்கப்படும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

“கடத்தல் மூலம் நாட்டுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, தேசிய பாதுகாப்புக்கும், மக்களின் நலனுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here