சிப்பாங், ஜனவரி 17 :
கடந்த மாதம் நாட்டிலுள்ள 50 மாவட்டங்களைத் தாக்கிய வெள்ளத்தால் RM5.3 பில்லியன் முதல் RM6.5 பில்லியன் வரை நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளியியல் துறை (DOSM) தெரிவித்துள்ளது.
பிரதமர் துறையின் அமைச்சர் (பொருளாதார விவகாரங்கள்) டத்தோஸ்ரீ முஸ்தபா முகமட் இதுபற்றிக் கூறுகையில், பொதுச் சொத்துக்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் சம்பந்தப்பட்ட மொத்த இழப்புகள் RM2 பில்லியன் என்று கூறினார்.
அதனைத்தொடர்ந்து வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம், ஏறத்தாழ RM1.2 பில்லியன் முதல் RM1.4 பில்லியனுக்கு இடையேயான இழப்புகள் என மதிப்பிடப்பட்டுள்ளது; வாகனங்கள் (RM1 பில்லியன் முதல் RM1.3 பில்லியன் வரை); உற்பத்தித் துறை (RM800 மில்லியன் முதல் RM1 பில்லியன் வரை); வணிக வளாகங்கள் (RM500 மில்லியன் முதல் RM600 மில்லியன் வரை); மற்றும் விவசாயத் துறை (RM40.9 மில்லியன் முதல் RM49.9 மில்லியன் வரை) என பேரிழப்பை சந்தித்துள்ளது என்றார்.
குடும்ப வருமானச் செலவு மற்றும் அடிப்படை வசதிகள் கணக்கெடுப்பு (HIES/BA) 2022ஐ இன்று இங்கு தொடங்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
HIES/BA 2022 இல், ஜனவரி முதல் டிசம்பர் வரை நாடு முழுவதும் சுமார் 93,000 குடும்பங்கள் அல்லது 500,000 குடியிருப்பாளர்களை உள்ளடக்கிய நேருக்கு நேர் நேர்காணல் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முஸ்தபா கூறினார்.
குடும்ப வருமானம் மற்றும் செலவு முறைகளை ஆய்வு செய்வது மற்றும் வறுமை புள்ளிவிவரங்களை, குறிப்பாக நிர்வாக மாவட்ட அளவில் வறுமை விகிதம் என்பவை கணக்கெடுப்பின் நோக்கங்களில் ஒன்றாக இருப்பதாக முஸ்தபா கூறினார்.
“இந்த புள்ளி விபரங்கள் அரசாங்கம் திட்டமிடவும், தேசிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதன் செயல்திறனை கண்காணிக்கவும் உதவுகிறது, குறிப்பாக மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த புள்ளி விவரங்கள் மிகவும் முக்கியம்” என்று அவர் கூறினார்.