இந்தோனேசியாவின் சூதாட்ட விடுதியில் இரு தரப்பினருக்கிடையிலான மோதலால் தீ விபத்து; 19 பேர் உடல் கருகி பலி!

ஜகார்த்தா, ஜனவரி 26:

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் சோரோங் நகரில் ‘நைட் கிளப்’ எனப்படும் இரவு நேர சூதாட்ட விடுதி ஒன்று உள்ளது. 2 மாடிகளை கொண்ட இந்த சூதாட்ட விடுதி இரவில் தொடங்கி விடியும் வரை இயங்கும்.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு, இந்த சூதாட்ட விடுதியில் ஏராளமான இளைஞர்கள் திரண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் சிலர் மது அருந்தியவாறு ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

கத்திகள், அம்புகள் உள்ளிட்டவற்றால் அவர்கள் தாக்கிக்கொண்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் சூதாட்ட விடுதியின் 2-வது தளத்தில் தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ வேகமாக பரவி 2-வது தளம் முழுவதையும் சூழ்ந்து கொண்டது. இதனால் அங்கிருந்தவர்கள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கினர்.

இதனிடையே மோதலில் ஈடுபட்டவர்கள் சூதாட்ட விடுதிக்கு வெளியே இருந்த கார்களையும் தீ வைத்து எரித்தனர். இதனால் அந்த பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது.

இதுபற்றி தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அதற்குள் 18 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அடையாளம் காணமுடியாதபடி அவர்களின் உடல்கள் எரிந்து கரிக்கட்டைகளாகின.

இதனிடையே இருதரப்பு மோதலிலும், தீயில் சிக்கியும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here