மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில், இருவர் பலி! ஒருவர் படுகாயம்

பெக்கான், பிப்ரவரி 6 :

இன்று, இங்குள்ள ஜாலான் பெக்கான்-நெனாசி-ரோம்பினின் சாலையின் 36 ஆவது கிலோமீட்டரில், மூன்று கார்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

நண்பகல் 12.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், ஜோகூரில் உள்ள பாசீர் கூடாங்கைச் சேர்ந்த புரோட்டான் சாகா கார் ஓட்டுநர் சாவ் ஜியுன் ஷியான், 27, மற்றும் பெரோடுவா மைவி கார் ஓட்டுநர் ஜைனோங் அப்துல்லா, 56, ஆகியோர் இறந்தனர்.

பெக்கான் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஜைதி மாட் ஜின் இச்சம்பவம் பற்றிக் கூறுகையில், இவ்விபத்து தொடர்பில் அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர், மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில் பாதிக்கப்பட்ட ஜியுன் ஷியான் ரோம்பினில் இருந்து பெக்கான் நோக்கி செல்லும் வழியில் புரோட்டான் சாகாவை ஓட்டிச் சென்றது கண்டறியப்பட்டது.

சம்பவ இடத்தில், ஜியுன் ஷியான் ஓட்டிச் சென்ற கார் சாலையில் சறுக்கி எதிர் பாதையில் நுழைந்து, விழுந்தது.

“ஜியுன் ஷியான் ஓட்டிச் சென்ற கார், ஜைனோங் ஓட்டிச் சென்ற பெரோடுவா மைவி மீது மோதியது. நான்கு பேர் பயணித்த மற்றொரு புரோட்டான் வைரா கார், மைவிக்குப் பின்னால் இருந்ததால், பிரேக் போட போதிய நேரம் கிடைக்காததால் மைவியின் பின்புறத்தில் மோதியது.

“​​சம்பவ இடத்திலேயே ஜியுன் ஷியான் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது, நெனாசி ஹெல்த் கிளினிக்கில் ஜைனோங் சிகிச்சை பெற்று வந்தபோதும், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த விபத்தில் மைவியில் பயணித்த யூசோப் அலியாஸ், 59, பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும், புரோட்டான் வைராவின் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41 (1)ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here