பலூ, பிப்ரவரி 9 :
இந்தோனேசியாவில் 6 ஆண்டுகளாக கழுத்தில் டயருடன் அவதிப்பட்டு வந்த முதலை இறுதியாக அதிலிருந்து காப்பாற்றப்பட்டது.
பலூ நகரத்தில் உள்ள ஆற்றில் இருந்த முதலை ஒன்று இருசக்கர வாகனத்தின் டயர் கழுத்தில் சிக்கி அவதிப்பட்டு வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக சிக்கியிருந்த அந்தத் டயரை அகற்ற எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளும் தோல்வியடைந்தன.
அந்த டயரை அகற்றுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என பலூ நகர நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், டிலி என்பவர் 3 வாரங்கள் முயற்சி செய்த பின் முதலையைப் பிடித்து அதன் கழுத்தில் இருந்த டயரை அகற்றியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.