தொழிற்சாலைகளில் பணிபுரியும் 64 இந்தியத் தொழிலாளர்கள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கைது!

கூலாய், மார்ச் 6 :

நேற்று இங்கு சேனாய் பகுதியிலுள்ள ஒரு தொழிற்சாலை வளாகத்தில் குடிவரவுத் துறை நடத்திய சோதனையில், அங்கு வேலை செய்வதாக நம்பப்படும் 64 இந்தியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தியத் தொழிலாளர்கள் தொழிற்சாலையில் வேலை செய்ய முடியாது என்கிற நடைமுறை தனக்கு தெரியாது என்று அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் கூறியதை குடிவரவுத் துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன் விளைவாக, தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தின் (RTK) கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 64 சட்டவிரோத குடியேறிகள் (PATI) நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் குடிவரவுத் துறையின் அமலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

குடிவரவுத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ கைருல் டிசைமி தாவூட் கூறுகையில், அரசின் கொள்கையின்படி, கட்டுமானம், சேவைகள், விவசாயம் மற்றும் தோட்டத் துறைகளில் மட்டுமே வேலை செய்ய அந்நாட்டுத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார் .

“இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட தொழிற்சாலை சோதனையில், இவ்வளவு இந்தியர்கள் ஒரே இடத்தில் பணியமர்த்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்றும் மறுசீரமைப்பின் கீழ் தொழிலாளர்களை பதிவு செய்ய, நடைமுறையிலுள்ள முகவர்களின் சேவைகளை இந்தத் தொழிற்சாலை பயன்படுத்தக்கூடும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

“RTK பதிவு சீட்டின் அடிப்படையில், இந்த ஊழியர் ஏப்ரல் 2021 இல் பதிவு செய்யப்பட்டார், இப்போது அது மார்ச் 2022 ஆகும், அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்திய தொழிலாளர்கள் அனைவரும் அங்கு வேலை செய்கிறார்கள்,” என்று நேற்றிரவு Op Mega JIM ஐ வழிநடத்திய பிறகு அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட 64 இந்தியத் தொழிலாளர்களைத் தவிர, குடிவரவுத் துறையினர் 16 நேபாளப் பிரஜைகள், மூன்று மியான்மர் பிரஜைகள் மற்றும் 2 வங்காளதேச பிரஜைகளையும் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் செல்லுபடியாகும் ஆவணங்கள் ஏதும் இல்லாதவர்கள் என்று கைருல் டிசைமி கூறினார்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அனைத்து ஆண் சட்டவிரோத குடியேற்றவாசிகளும் மேலதிக விசாரணைக்காக செத்தியா டிராபிகாவில் உள்ள குடிவரவு தடுப்புக்காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

“எந்தவொரு செல்லுபடியாகும் ஆவணமும் இல்லாத ஊழியர்களிடம் சரியான ஆவணங்கள் இருப்பதை முதலாளி நிரூபித்தால், அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

“இருப்பினும், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் எவ்வாறு இங்கு பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதலாளி அவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here