சுபாங் ஜெயா, மார்ச் 7 :
சுபாங் ஜெயாவைச் சுற்றி, சூதாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட ஐந்து இணைய சூதாட்ட வளாகங்கள் மீது காவல்துறை மற்றும் தெனகா நேஷனல் பெர்ஹாட் (TNB) ஊழியர்களால் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அப்துல் காலித் ஓத்மான் கூறுகையில், மீண்டும் இவை இணைய சூதாட்ட மையமாக செயல்படுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாகவே இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டது என்றார்.
அவர் மேலும் கூறுகையில், பூச்சோங், பண்டார் சன்வே மற்றும் புத்ரா ஹைட்ஸ் உள்ளிட்ட ஐந்து இடங்களில் உள்ள இணைய சூதாட்ட வளாகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
“ஆன்லைன் சூதாட்டத்தை நடத்தும் வளாகங்களில் மின்சார விநியோகத்தை துண்டிக்க சிறப்பு நடவடிக்கையாக Op Dadu Khas எனும் சோதனை நடவடிக்கையை செயல்படுத்தியுள்ளோம்.”
“ஆண்டு முழுவதும், நாங்கள் 11 இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளோம். 10 இடங்களில் மின் வெட்டுக்களை மேற்கொள்ள TNB யிடம் அனுமதி பெற்றுள்ளோம்,” என்று அவர் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இது திறந்த சூதாட்ட வீட்டுச் சட்டம் 1953 இன் பிரிவு 21 A (1) இன் படி, நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அப்துல் காலித் கூறினார்.
இந்த கடுமையான நடவடிக்கையால், இந்த வளாகம் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட மையமாக பயன்படுத்தப்படாது என தாம் நம்புவதாக அவர் கூறினார்.
“இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் எந்த வளாகத்தையும் அவர்கள் கண்டால், தகுந்த நடவடிக்கைக்காக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு சுபாங் ஜெயா குடியிருப்புவாசிகளுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம் ” என்றும் அவர் கூறினார்.