‘ஜோகூரைக் கைப்பற்றுவோம்– முன்னேற்றுவோம்’ – நடப்பு மந்திரி பெசார் ஹாஸ்னி முகமட் சூளுரை

(மக்கள் ஓசை பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தன் வாழ்க்கைப் பின்னணி குறித்தும், நடப்பு ஜோகூர் அரசியல் நிலவரங்கள் குறித்தும், விவரிக்கிறார் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஹாஸ்னி முகமட்)

சந்திப்பு: இரா. முத்தரசன்

  • இளம் வயதில் ஓட்ட விளையாட்டுகளில் மாநிலத்தைப் பிரதிநிதித்தவர் இன்று அதே மாநிலத்தின் ம ந்திரி பெசார்
  • ஜோகூர் சட்டமன்றத்தைக் கலைத்தது ஏன்?
  • மூடா கட்சித் தலைவர் இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய முன்னுதாரணம் அல்ல!
  • ஜோகூரில் எதிரணித் தலைவர்கள் சைட் சாதிக்-மொஹிடின் யாசினை எதிர்கொள்ள வகுத்திருக்கும் வியூகங்கள் என்ன?

அம்னோவில் அவ்வப்போது  அரசியல் வலிமையும் திறமையும் வாய்ந்த தலைவர்கள் திடீரென்று விஸ்வரூபம் எடுப்பார்கள். அண்மையக் காலத்தில் அவ்வாறு விஸ்வரூபம் எடுத்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்பவர் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமட்.

கடந்த பல ஆண்டுகளாக  அம்னோ அரசியலில் மறைக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வந்தவர். ஆனால், காலம் கனிய – அதிர்ஷ்டமும் ஒன்று சேர- 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜோகூரில் அமைந்த புதிய ஆட்சி மாற்றத்தில்  மந்திரி பெசாராக நியமனம் பெற்றார்.

ஓரிரு ஆண்டுகளில் ஜோகூர் மாநிலத்தின் சக்தி வாய்ந்த மந்திரி பெசாராகவும் அம்னோவின் செல்வாக்குமிக்கத் தலைவராகவும் உயர்ந்திருக்கிறார்.

எப்போதும் புன்னகை தவழும் முகம். அமைதியான அலட்டல் இல்லாத உரையாடல்கள். புலமையும் சரளமும் இணைந்த ஆங்கில மொழியாற்றல் ஜோகூர் மாநிலத்திற்கே உரிய – அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு– இப்படியாக பல அம்சங்களால்  மக்களைக் கவர்ந்திருக்கிறார் ஹாஸ்னி.

எந்தப் பிரச்சினையும் இல்லாமல்  அடுத்தப் பொதுத்தேர்தல் வரை ஜோகூர் மாநில அரசாங்கத்தை அவர் வழி நடத்தியிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல் “எனக்கு மக்களின் அதிகாரம் வேண்டும், ஓரிரு தொகுதிப் பெரும்பான்மையில் மிரட்டல்களுக்குப் பயந்து கொண்டு மாநிலத்தை வழி நடத்தும் அவல நிலை எனக்கு வேண்டாம்” என்று முழங்கி துணிச்சலுடன் மாநில சட்டமன்றத்தைக் கலைத்திருக்கிறார்.

மக்கள் ஓசையுடனான நேர்காணலில் தேர்தல் பரபரப்புக்கிடையில் அமைதியாக நம்முடன் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் உரையாடினார் ஹாஸ்னி.

பல விஷயங்களை வெளிப்படையாக எடுத்துக் கூறினார். சிற்றுண்டி வழங்கி, அவரும் நம்முடன் சேர்ந்து உணவருந்தினார். அந்த நேர்காணல் நிறைவுபெற்றபோது, அரசியலில் அவர் பெற்ற – பெற்றுவரும்  வெற்றிகளின் காரணங்களும் நமக்குப் புரிந்தது.

ஜோகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், ஹாஸ்னிதான் மீண்டும் மந்திரி பெசார் என அம்னோ தலைவர் ஸாஹிட் அமிடி அறிவித்திருக்கிறார்.

அது மட்டுமல்ல வழக்கமாக அம்னோவின் தேசிய நிலையிலான தலைவர்கள்  முன்நின்று வழி நடத்தும்  தேர்தலாக இல்லாமல்  எல்லா அம்சங்களிலும் ஹாஸ்னியே ஜோகூர்  தேர்தலை தலைமையேற்று முன்னின்று நடத்துகிறார்.

இனி மக்கள் ஓசைக்கு அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலிலிருந்து சில முக்கிய பகுதிகள்…

இளமைக் காலமும், அரசியல் நுழைவும்

கே: முதலில் உங்களின் இளமைக் காலம் பற்றியும்  அரசியலில்  நீங்கள் நுழைந்தது எப்படி என்பது பற்றியும் கூறுங்கள்?

: நான் ஜோகூர், பொந்தியான் வட்டாரத்தில்  பிறந்து வளர்ந்தவன். எனது தந்தையார் அப்போது தகவல் துறை அமைச்சராக இருந்த டத்தோ முகமட் ரஹ்மாட்டுக்கு அந்தரங்கச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் தாக்கமோ என்னவோ தெரியவில்லை. சிறு வயது முதல் எனக்கு அரசியல் ஆர்வமும் சமூகப் பணிகளில் ஈடுபடும் ஆர்வமும் ஏற்பட்டது.

ஏழு பேர் கொண்ட சகோதர, சகோதரிகளில் நான்தான் மூத்தவன்.  சிறு வயதில்  நான் விளையாட்டுப் போட்டிகளில் தீவிரம் காட்டினேன். சில விளையாட்டுகளில் மாநிலத்தைப் பிரதிநிதித்தேன். பின்னர், பொறியியல் துறையில் (என்ஜினியரிங்) அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றேன். 1986ஆம் ஆண்டில்  நாடு திரும்பி, எனது சொந்த பொறியியல் ஆலோசனை நிறுவனத்தை நடத்தினேன். பின்னர், 1999ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் உசேன் ஓன் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சரானபோது, அவரது அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டேன்.

கே: மாணவப் பருவத்தில் எந்த மாதிரியான விளையாட்டுகளில்  ஆர்வம் காட்டினீர்கள்? மாநிலத்தைப் பிரதிநிதித்தீர்கள்?

: நான் குறுகிய தூர ஓட்டப்பந்தயங்களில் சிறந்து விளங்கினேன். அத்தகையப் போட்டிகளில்  நான் மாநிலத்தைப் பிரதிநிதித்தேன்.

கே: நேரடி தீவிர அரசியலில் எப்போது ஈடுபட்டீர்கள்?

: நான் எடுத்த எடுப்பிலேயே வானத்திலிருந்து  அம்னோ அரசியலில் குதித்தவன் இல்லை. கிளை அளவிலும் இளைஞர் பகுதியிலும் பின்னர் மாநில அளவிலும் அரசியலில் படிப்படியாக ஈடுபட்டு மக்களுடன் பழகி, அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து வளர்ந்தவன் நான்.

ஜோகூர் மந்திரி பெசாரின் இந்தியர்களுக்கான சிறப்பு செயலாளர் ரவீன்குமார் கிருஷ்ணசாமியுடன்…

ஜோகூர் மாநில அம்னோவின் இளைஞர் பகுதித் தலைவனாகவும் நான் இருந்திருக்கிறேன். ஆனால், அந்தப் பதவியில் இருந்தபோதும், நான் அரசாங்கப் பதவிகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டேன். இருந்தாலும் நான் தொய்வடையவில்லை. தொடர்ந்து கட்சிக்கு விசுவாசமாக இருந்தேன். பின்னர் 2004ஆம் ஆண்டில் பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

2008ஆம் ஆண்டில்  பெனூட் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 2013 முதல் 2018ஆம் ஆண்டுவரை ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகப் பணியாற்றினேன். 2018ஆம் ஆண்டில்  என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும்.

மாநில அரசாங்கம் வீழ்ந்தது. எனினும்,  நான் பெனூட் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

தேசிய முன்னணிக்கு எதிரான அலையில் 2018-இல் வெற்றி பெற்றது எப்படி?

கே: 2018 பொதுத் தேர்தலில்  தேசிய முன்னணிக்கு எதிராக தேசிய, மாநில அளவில் பலர் தோல்வி அடைந்தனர். ஆனால், நீங்கள் மட்டும் வெற்றி பெற்றீர்கள். அதுவும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில், 4447 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றீர்கள். இதற்குக் காரணம் என்ன? ஏதாவது வித்தியாசமாக செய்ததால் இத்தகைய வெற்றியைப் பெற முடிந்ததா?

: நான் எதையும்  வித்தியாசமாக செய்தேன் என்பதை ஒப்புக் கொள்ளமாட்டேன். கடுமையாக உழைத்தேன்.  பெனூட் சட்டமன்றத் தொகுதியை நன்றாக, முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு நிறைய நேரம் செலவிட்டிருக்கிறேன்.

அம்னோவின் பின்புலமும் எனக்குப் பெருமளவில் உதவி செய்தது. நான் முன்பு கூறியபடி, நான் அடிமட்டத்திலிருந்து வந்தவன் என்பதால், என்னால்  பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. பல ஏற்றத் தாழ்வுகளையும் நான் பார்த்திருக்கின்றேன். இப்போதும் நான் பொந்தியான் அம்னோ தொகுதியின் தலைவராக இருக்கின்றேன்.

நான் ஒரே இரவில் அரசியலில் வளர்ந்தவனும் அல்ல. இத்தகைய அனுபவங்கள் மூலம் உழைப்பின் மூலம் என்னால் மீண்டும் அந்தத் தொகுதியில் வெற்றி பெற முடிந்தது. எனக்கு தொகுதி எதுவும் தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டபோதும், மக்களோடு பழகினேன். தொடர்ந்து அரசியலில் இருந்தேன். அரசியலில் ஒரே இரவில் வளர்ந்து விட முடியாது.

சரளமான ஆங்கில மொழி நடை எப்படி வசமானது?

கே:உங்கள் பேட்டிகளிலும்  உரைகளிலும்  இடையிடையே நீங்கள் ஆங்கில மொழியைப் பயன்படுத்துகிறீர்கள். அதிலும்  உங்கள் ஆங்கில மொழிப் பேச்சு சரளமாகவும்  தங்குதடையின்றி மொழி வளத்தோடும் இருக்கிறது. இந்தத் திறமை உங்களுக்கு எப்படி வாய்த்தது?

: (சிரித்துக் கொள்கிறார்) ஜோகூர்  மாநிலம் போன்ற பல இன மக்களைக் கொண்ட ஒரு மாநிலத்தில்  நீங்கள் அனைவரையும் அணுகுவதற்கும் தொடர்பு கொள்வதற்கும் ஆங்கில மொழி அறிவு மிகவும் அவசியம்.

எனது அமெரிக்கக் கல்வி எனது ஆங்கில புலமைக்கு உதவியது என்பது உண்மைதான். அதேவேளையில், ஆங்கிலத்தில் சிறந்த முறையில் உரையாட நான் பயிற்சியும் முயற்சியும் எடுத்துக் கொண்டேன்.  அதுவும் ஒரு காரணம்.

ஜோகூரில் அனைத்து இனங்களுக்கும்  தலைமை தாங்கும்  ஒருவராக இருப்பதற்கும் நிர்வாகத்தை சிறப்பாக நடத்துவதற்கும்  ஆங்கில மொழி அறிவு அவசியம் என நான் கருதுகிறேன்.

கே: மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான உங்களின் வாதங்களை முன் வைத்திருக்கிறீர்கள். ஒரே ஒரு தொகுதிப் பெரும்பான்மையில்  மாநில அரசாங்கம் ஊசலாடுகிறது என்பது அதில் ஒன்று. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளால் மீண்டும் அதேபோன்றதொங்குசட்டமன்றம் அமைந்தால்யாருக்கும்  பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால் – என்ன செய்வீர்கள்?

: எங்கள் மீது மக்களுக்கான எதிர்பார்ப்பும்  அபிமானமும்  அதிகரித்திருப்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். எதுவுமே  சுலபமாகக் கிடைத்துவிடாது என்பதை நம்புபவன் நான். ஒன்றை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவன் நான்.

சிறப்பான முறையில் பிரச்சாரம் செய்தால், தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொண்டால், புதிய முகங்களையும் நிபுணத்துவ பின்னணி கொண்டவர்களையும் வேட்பாளர்களாக முன்நிறுத்தினால், முன்பு இருந்ததைவிட கூடுதல் பெரும்பான்மையில் நாங்கள் வெற்றி பெற முடியும் என நம்புகிறேன். மூன்றில் இரண்டுப் பெரும்பான்மை பெறுவது கூட அடைய முடியாத ஒன்றல்ல என நம்புகிறேன்.

தெளிவான தூரநோக்கு இலக்குடனும், வியூகத்துடனும் வாக்காளர்களை அணுகினால் வெற்றி நிச்சயம் என நான் நம்புகிறேன்.

எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றுவோம். ஆட்சியை அமைப்போம். ஜோகூரை அதன் முந்தைய செழிப்பான வளர்ச்சிப் பாதைக்கு மீண்டும் கொண்டு செல்வோம்.

முன்பை விட சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்வோம் என்றும் நம்புகிறேன். ஒரு காலத்தில் முதலீடுகள், வளர்ச்சி என்று பார்க்கும்போது ஜோகூர் பல அம்சங்களில் முன்னணியில் இருந்தது.  இப்போது அப்படியில்லை.

எங்களின் பார்வையில் மக்களின் விருப்பம் சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது. மாநிலத்தில் நிகழ்ந்த அரசியல் குளறுபடிகளுக்கு  நாங்கள் காரணமல்ல.  சில அரசியல் முடிவுகளின் பிரதிபலனாகவே இந்த மாநிலத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.

எனவே,  கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மந்திரி பெசாருமான  முகமட் சாப்பியான் காலமானபோது இடைத் தேர்தலை நடத்துவதைவிட குறுகிய பெரும்பான்மையில்  ஆட்சி நடத்துவதைவிட ஒட்டுமொத்த  அதிகாரத்தையும்  மக்கள் வசம் ஒப்படைத்து அடுத்து யார் வரவேண்டும் என அவர்களே முடிவு செய்யட்டும் எனக் கருதினேன்.

அதனால்தான்  சட்டமன்றத்தைக் கலைத்தேன்.

  • 2018-இல் நிராகரிக்கப்பட்ட தேசிய முன்னணி மீண்டும் 2022-இல் தேர்ந்தெடுக்கப்படும் என எந்த நம்பிக்கையில் தேர்தலைச் சந்திக்கிறீர்கள்?
  • எதிர்க்கட்சிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் தேசிய முன்னணிக்குப் பாதிப்பா?
  • ஜோகூர் தேர்தலில் வெற்றிபெற்றால் அடுத்து வரப்போகும் 15-வது பொதுத் தேர்தலில் உங்களின் பங்களிப்பு என்ன?

கே: 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கும் இப்போது நடைபெறவிருக்கும் தேர்தலுக்கும் வித்தியாசங்கள் உண்டு. 3 அல்லது 4 முனைப் போட்டிகள் இந்த முறை நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் எந்த நம்பிக்கையில் சட்டமன்றத்தைக் கலைத்தீர்கள்? 2018-இல் மக்களால்  நிராகரிக்கப்பட்ட தேசிய முன்னணியை 2022இல் மீண்டும் மாநில சட்டமன்றத் தேர்தலில்  வெற்றி பெற வைக்க தாங்கள் வகுத்திருக்கும் வியூகங்கள் என்ன? அவை இரகசியங்கள் இல்லை என்றால் கூறலாம்.

: ஜோகூர் பல விஷயங்களில்  பின்தங்கிவிட்டது.  பக்காத்தான், பெரிக்காத்தான் போன்ற  கூட்டணியின் ஆட்சியின் கீழ் ஜோகூர் தனது பொலிவை இழந்துவிட்டது. இந்த மாநிலத்தை மீண்டும் ஒளிவரச் செய்ய, உயர்வடையச் செய்ய நான் உறுதி பூண்டுள்ளேன்.

மூன்று முதல் ஆறு தொகுதிகளில் போட்டிகள் கடுமையாக இருக்கலாம். இருந்தாலும்,  மக்களின் ஆதரவோடு  எங்களால் வெற்றி பெற முடியும் என நம்புகிறேன். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு ஜோகூர் தேர்தல் ஒரு முன்னோட்டமாகும்.

அடுத்த ஐந்தாண்டுகளில் ஜோகூர் மாநிலத்தை எப்படி உருமாற்றப் போகிறோம் என்பதை தேர்தல் அறிக்கை மூலம் நாங்கள் விளக்குவோம். இந்த நவீன யுகத்தில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கை மட்டும் முக்கியமல்ல– போதுமானதல்ல– என்று நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.

இருந்தாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் செய்யப் போகிறோம் என்பதை நாங்கள் பிரச்சாரங்களிலும் தேர்தல் அறிக்கையிலும் விளக்குவோம்.

கே: இந்த முறை ஜோகூர் தேர்தல் மலாக்கா போன்று இல்லாமல்  இருப்பதற்கு  முக்கிய காரணம் உங்களுக்கு எதிராக அணிவகுத்திருக்கும் தலைவர்களும்  ஜோகூர் மாநிலத்துக்காரர்கள். பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் முஹிடின் யாசினும் மூடா கட்சிக்குத் தலைமை தாங்கும் சைட் சாதிக்கும் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? ரகசியம் இல்லை என்றால் உங்களின் வியூகங்களைக் கூறுங்கள்?

: (சிரித்துக் கொண்டே) நீங்கள் ரகசியம் என்று சொல்லிவிட்டதால் சில வியூகங்களை நாங்கள் கூற முடியாது. நீங்கள் குறிப்பிட்ட இரண்டு தலைவர்களையும்  எதிர்கொள்வது என்னைப் பொறுத்தவரையில் சிரமமான ஒன்றில்லை.  அவர்களைப் போல் நாங்கள் செயல்படுத்த முடியாத தேர்தல் வாக்குறுதிகளை வழங்கப் போவதில்லை. பொறுப்புணர்ச்சியோடும் நம்பகத் தன்மையோடும் கூடிய வாக்குறுதிகளை மட்டும் நாங்கள் வழங்கவிருக்கிறோம்.

உங்களை நிலாவுக்குக் கூட்டிச் செல்வோம் என்பது போன்ற நடக்க முடியாத வாக்குறுதிகளை நாங்கள் வழங்கப் போவதில்லை. உதாரணமாக இப்படித்தான் கடந்த முறை நாங்கள் வந்தால் பிடிபிடிஎன் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று கூறினார்கள். ஆனால், செய்ய முடிந்ததா?

எங்களின் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்து அவர்களின் பின்னணி குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. நியாயமான செயல்படுத்தக்கூடிய  தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம்  நாங்கள் எங்களின் அரசியல் எதிரிகளை வெற்றிக் கொள்ள முடியும் என நம்புகிறோம்.

ஜோகூர் மாநிலத்தை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்வோம் எனவும் உறுதி அளிக்கிறோம். இந்த இடத்தில் மூடா கட்சித் தலைவர் சைட் சாதிக் குறித்தும்  சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.

இன்றைய இளைஞர்கள் பின்பற்றக்கூடிய தவறான உதாரணம் சைட் சாதிக். அவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, என்ன சாதனைகளைச் செய்தார்? என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

ஒருவரின் உருவம், பேச்சுத் திறன் ஆகியவற்றை மட்டும் வைத்து  எடை போடக்கூடாது. அவரின் உண்மையான திறன் என்ன? செயல்பாடு என்ன என்பதையும் மதிப்பிட வேண்டும். ஜோகூரில் இளைஞர்களுக்கான பல களன்களை நாங்கள் கொண்டிருக்கிறோம்.  ஜோகூர் மாநில பல்கலைக்கழக மாணவர்களுக்கான பரிமாற்றத் தளங்கள் பலவற்றை நாங்கள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றோம்.

அவற்றின் மூலம் அவர்களுடன் நாங்கள் தொடர்ந்து  தொடர்பிலும் தகவல் பரிமாற்றத்திலும் பங்குப் பெற்று வருகின்றோம்.  இந்தப் பணிகளை நாங்கள் தொடர்வோம். அவர்களின் ஆதரவை நாங்கள் பெறுவோம் என்பதில்  நாங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்.

கே: எதிர்க்கட்சிகளுடன் அரசாங்கம் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜோகூர் தேர்தலில் உங்களுக்கு பாதிப்பாக இருக்கும் என கருதுகிறீர்களா?

: என்னைப் பொறுத்தவரையில் அத்தகையப் பாதிப்புகள் ஏதும் இல்லை. இப்போதுகூட ஜோகூர் தேர்தலில் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே, ஒவ்வொரு கட்சியையும் கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர்கள் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்களுக்காக  பிரச்சாரம் செய்யவிருக்கிறார்கள். எனவே,  புரிந்துணர்வு ஒப்பந்தம் எங்களுக்கு எந்த விதத்திலும் தடையாக இருக்காது.

கே: 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஒரு முன்னோட்ட தேர்தலாக  மக்களின் மனநிலையைக் கணிக்கும் தேர்தலாக ஜோகூர் தேர்தல் பார்க்கப்படுகிறது. ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலில் உங்களின் இலக்கு என்ன?

: 15ஆவது பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் ஜோகூர் மாநிலத்திற்கு  சிறப்பான, நியாயமான பிரதிநிதித்துவம்  கிடைக்க நாங்கள் பாடுபடுவோம். மத்திய அரசாங்கத்திலும் எங்களின் ஆட்சி அமைந்தால்  ஜோகூரை முன்னணி மாநிலமாக மாற்றிக் காட்டுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here