சூரியன் இன்றி பூமி சுழலாது; பெண்கள் இன்றி இப் பூவுலகம் இயங்காது

பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.. ஆண்டு தோறும் மார்ச் 08-ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த உலகில் பெண்ணாக பிறந்தவளுக்கு தாய், மனைவி, தங்கை, தோழி, மகள் என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான்.

ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது. இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சரி இந்த பதிவில் பெண்களை போற்றும் வகையில் மகளிர் தினம் கட்டுரை பதிவு செய்யப்பட்டுள்ளது அதனை படித்தறியலாம் வாங்க.

பெண்ணின் பெருமை:

இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவது மறுக்க முடியாத உண்மையல்லவா. குறிப்பாக ஆண்களை எதிர்கொள்வது சிரமம் என்ற நிலையிலிருந்து முன்னேறி ஒவ்வொரு துறையிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராக  கடுமையான போட்டியைத் தந்து வருகிறார்கள்.  பெண்கள் என்றாலே ஆசிரியர் அல்லது செவிலியர் வேலைக்குத் தான் என்ற கூற்றெல்லாம் தற்போது மாறிவிட்டது.

அதாவது பெண்கள் இப்பொழுது ஆகாய விமானம் ஓட்டுவது, ரயில் இன்ஜின்களை இயக்குவது, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது, கணினித் துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்துவது என்று பெண்கள் முத்திரை பதிக்காத துறையே இல்லை. அந்த அளவிற்கு பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றன.

பெண் கல்வி:

பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்றும். அவர்களை வீட்டிற்குள் பூட்டி வைத்து வீட்டு வேலைகளை செய்ய வைத்த காலங்கள் அனைத்தும் மாறிவிட்டது.

இன்றைய சூழ்நிலையில் பெண்கள் நாடு கடந்து, கடல் கடந்து பல சாதனைகளை செய்து வருகின்றன. ஆகவே சமுதாய மறுமலர்ச்சி ஏற்பட, குடும்பத்தை சரியான முறையில்நிர்வாகம் செய்ய, உலகத்தை பேணிக் காக்க, பொருளாதார நிலை அதிகாரிக்கு, பெண் கல்வி அவசியமான ஒன்றாகும்.

ஒரு பெண் கல்வி கற்றவளாக இருந்தால் தான் பிரச்சனைகளை அறிதல், ஆராய்தல், தீர்வு காணல், மாற்று வழிகளை கண்டறிதல், நேரத்திட்டமிடுதல் போன்ற பல நன்மைகளை பெற முடிகிறது.

பெண் கல்வி மூலம் நடைமுறை அறிவு பெறச்செய்தல், தொழில் திறமையினை வளர்த்தல், தன்னம்பிக்கையை உருவாக்குதல், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தல் போன்றவற்றினை மேம்படுத்தலாம்.

தோற்றம்:

1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி, வாக்களிக்கும் உரிமை கோரி 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி. இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின்.

கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா. அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. 1917-க்குப்பின் உலக மகளிர் அமைப்புகள் ஒன்று கூடி மகளிர் தினத்தை மார்ச்-8 என்று கட்டமைத்தனர்.

பெண்மையைப் போற்றியவர்கள்:

உலக அளவில் நாட்டின் ஆன்மிக தத்துவ ஞானத்தை, உணர்த்திய வீரத்துறவி சுவாமி விவேகானந்தரும் பெண்மையை போற்றியவர்களில் தலைசிறந்து விளங்குகிறார். மகாகவி பாரதியார் பெண்மையை போற்றுவதை தன் மனைவியிடமிருந்தே தொடங்கினார்.

“செல்லம்மா எனக்கு சமமாக பக்கத்தில் அமர்ந்து கொள். உடலமைப்பில் மாறுபட்டாலும் ஆணையும், பெண்ணையும் சமமாகவே இறைசக்தி படைத்துள்ளது. எண்ணங்களும், உணர்வுகளும் ஒன்றே ஆகும்” என கூறிப் பெருமைப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here